அரசு உத்தரவை காட்டி அனுமதி மறுத்த அதிகாரிகள் ; வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுற்றுலாபயணிகள் ; வால்பாறையில் பரபரப்பு! !
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது கேரள மாநிலம் சாலக்குடிக்கு அருகில் சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வால்பாறை பகுதியில் அதிகளவில் வாழ்ந்து வரக்கூடிய கேரள மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு கூட மளுக்கப்பாறை வழியாக செல்லமுடியாத நிலையில் பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோபாலபுரம் சோதனை சாவடி அல்லது கோவையில் உள்ள வாளையாறு சோதனை சாவடி வழியாகத் தான் கேரளாவிற்கு சென்று வந்தனர்.
இதனையடுத்து தமிழக மற்றும் கேரள அதிகாரிகள் ஒத்துழைப்போடு வால்பாறை பகுதியைச் சேர்ந்த கேரள பொது மக்களை மட்டும் தமிழக- கேரள சோதனை சாவடிகள் வழியாக அவசர தேவைகளுக்கு அனுமதித்து வருகின்றனர். தற்போது கேரளாவில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கேரள மாநிலம் சாலக்குடி பகுதியிலிருந்து தமிழக கேரள எல்லை பகுதியான மளுக்கப்பாறை பகுதி வரை கேரள அரசு போக்குவரத்து கழகம் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு சுற்றுலா அரசு பஸ்சில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளையும் தனியார் வாகனங்களில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளையும் மளுக்கப்பாறை பகுதியில் உள்ள தமிழக போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருக்கும் சுகாதார துறையினரும் வருவாய் துறையினரும் மற்றும் போலீசாரும் சோதனை சாவடியை தாண்டி தமிழகத்தில் உள்ள சோலையாறு அணை பகுதி வரை சென்று வருவதற்கு அனுமதியளிப்பதில்லை.இதனால் கேரள மாநில சுற்றுலா பயணிகள் சோலையாறு அணையை சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று சாலக்குடியிலிருந்து மளுக்கப்பாறை பகுதிக்கு 3 கேரள அரசு சிறப்பு சுற்றுலா பஸ்களில் வந்த சுற்றுலா பயணிகளை தமிழக அதிகாரிகள் சோலையாறு அணைக்கு செல்ல அனுமதிக்காமல் தடைவிதித்தனர். இதனால் தமிழக சோதனை சாவடியிலிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் கேரள சுற்றுலா பயணிகள் சோலையாறு அணைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கேரள சுற்றுலா பயணிகள் கூறுகையில்:
தமிழகத்திற்கு வருவதற்கு 2 தவணை தடுப்பூசி போட்டிருந்த சான்றிதழை காண்பித்தால் அனுமதிக்கலாம் என்று கோவை மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். இதனால் தான் நாங்கள் மளுக்கப்பாறைக்கு சுற்றுலா வந்தோம். ஆனால் தமிழக அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து வருகின்றார்கள். எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவிந்தாபுரம், கோவையில் உள்ள வாளையாறு சோதனை சாவடி வழியாக மட்டுமே சுற்றுலா பயணிகளை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால் மளுக்கப்பாறை சோதனை சாவடி வழியாக சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்று எங்களுக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை என்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-S.ராஜேந்திரன். செந்தில்குமார்.
Comments