சிங்கம்புணரி அருகே ஜீப் மோதி துப்புரவுப் பணியாளர் பலி!!

 -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூர் திருநகரைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மனைவி மலர் (வயது46).இவர் காளாப்பூர் ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று மாலை, இவர் பணி முடிந்து சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திருப்பத்தூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி ஜீப் ஒன்று மின்னல் வேகத்தில்  வந்துள்ளது.

ஜீப்பை உடப்பம்பட்டி பெருமாள்ராஜ் என்பவர் ஓட்டிவந்துள்ளார். மின்னல் வேகத்தில் வந்த ஜீப், கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு சிறுவர்களின் சைக்கிளை உரசிச் சென்று மலர் மீது மோதி, அதன் பின்பு சாலையோர மின் கம்பம் ஒன்றில் மோதி நின்றது. மலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுவர்கள் இருவரும் சிறு சிறு காயங்களுடன் தப்பினர்.

மின் கம்பம் உடைந்து சாய்ந்தது. இந்த விபத்து குறித்து  தீயணைப்புத்துறையினருக்கும் காவல்துறைக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சிறப்பு நிலைய அலுவலர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பத்தை அமைத்து மின் விநியோகத்தை சீரமைத்தனர். விரைந்து வந்த சதுர்வேதமங்கலம் காவல்துறையினர், மலரின் உடலைக் கைப்பற்றி, சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஜீப்பின் ஓட்டுனரான உடப்பம்பட்டி பெருமாள்ராஜ் என்பவரைத் தேடி வருகின்றனர். 

- அப்துல்சலாம், ராயல் ஹமீது.

Comments