தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இடுப்பளவு தண்ணீரில் பள்ளிக்கு செல்லும் மாணவிகள்!!

      -MMH

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே பாலம் கட்டும் பணி 3 ஆண்டாக நிறைவு பெறாததால், இடுப்பளவு தண்ணீரில் மாணவ, மாணவிகள் ஆபத்தான நிலையில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அருங்குளம் மற்றும் அகிலாண்டபுரம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் நீர் வெளியேற்றும் ஓடையில் 3 ஆண்டுகளுக்கு முன் 35 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பாலம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. ஆனால். 3 ஆண்டுகளாகியும் பாலத்தின் பணி இன்னும் நிறைவு பெறவில்லை.

கண்மாயின் நீர் வெளியேறும் பகுதி உடைந்து தற்போதுதான் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மழைநீர் கண்மாயில் தேங்காமல் மொத்தமாக வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி பொது மக்கள் மற்றும் சிவஞானபுரம் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் இடுப்பளவு நீரில் இறங்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. நீரின் வேகம் அதிகரித்தால் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகியுள்ளதாக தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments