ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல்! நடவடிக்கை எடுப்பார்களா போக்குவரத்து காவல்துறையினர்?!

 -MMH

கோவை- பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்கப் பட்டு உள்ளது. கிணத்துக்கடவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க இங்கு 2½ கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலம் வழியாக சென்றுவிடும். 

கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர்களுக்கு வசதியாக மேம் பாலத்தின் கீழ்ப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் போலீஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், வங்கிகள், மளிகை கடைகள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. 

இதனால் இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். 

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- 

கிணத்துக்கடவில் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வருபவர்கள் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் எவ்வித பாதிப்பும் இருக்காது. 

சிலர் நடுரோடு வரை ஆக்கிரமித்து தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். மேலும் இந்த சாலையில் எதிரே வாகனங்கள் செல்லக்கூடாது. ஆனால் விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரே செல்கிறார்கள். இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே இதுபோன்று இங்கு வாகனங்களை தாறுமாறாக நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டு. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments