ஆடை வாங்குபவர்களுக்கு ஆட்டுக்கிடாய் பரிசு!! - ஜவுளி கடை உரிமையாளரின் அசத்தல் விளம்பரம்!!

 

  -MMH

   ஆடை வாங்கினால் பாத்திரங்கள், கைக்கடிகாரங்கள், குக்கர், மிக்ஸி, கிரைண்டர், டிவி, பிரிட்ஜ் வரைக்கும் இலவசமாக பரிசாக வழங்கும் வழக்கம் இருக்கிறது. ஆடை வாங்கினால் காய்கறி, பழங்கள் இலவசமாக வழங்குவதும் நடைமுறையில் இருக்கிறது.

திருவாரூரில் இயங்கி வரும் நியூ சாரதாஸ் ஜவுளி கடை உரிமையாளரும் அப்படி பரிசுகளை அறிவித்திருக்கிறார். ஆனாலும் அதில் பளிச்சென்று தெரியும் விதமாக ஆடை வாங்குபவர்களுக்கு ஆட்டுக்கிடாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.

திருவாரூரில் கடந்த 17 வருடமாக ஜவுளி கடை வைத்து நடத்தி வரும் மணிமுருகன், ஐந்து வருடங்களாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசு குலுக்கல்களை நடத்திவருகிறார். ஒவ்வொரு தீபாவளிக்கும் தங்க நாணயம் பட்டுப் புடவை பாத்திரங்கள் பரிசாக அறிவித்து வந்த மணிகண்டன் இந்த தீபாவளிக்கு கூடுதலாக ஆட்டுக்கிடாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதுகுறித்து அந்த ஜவுளிக் கடையின் உரிமையாளர் மணிமுருகன், தனது ஜவுளி கடைக்கு வரும் அனைவரும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எல்லாம் தொழில்கள் எல்லாம் முடங்கிப் போய் கிடக்கின்றன . பலரும் வேலை இழந்து சொந்த ஊருக்கே திரும்பி இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சுயமாக தொழில் தொடங்கி சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முயன்று வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் என் கடைக்கு வந்துவிட்டால் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தான் ஆடுகளை வழங்குகிறேன். அப்படியாவது ஆடு வளர்ப்பில் கவனம் செல்லக்கூடும். சில பேருக்கு உதவியாக இருக்கும். அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக கூட அமையலாம் என்று நான் நம்புகிறேன். அதனால் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

-சுரேந்தர்.

Comments