திருநங்கைகள் வரைந்த ஓவியங்கள் அமெரிக்க கண்காட்சியில் வைக்க தேர்வு!!

 

  -MMH

  தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கைகள் வரைந்த ஓவியம் அமெரிக்க கண்காட்சியில் வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த திருநங்கை கல்கி சுப்பிரமணியம் கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

"ஓவியரும், கவிஞரும், சிறந்த பேச்சாளருமான நான் சிறந்த சமூக செயற்பாட்டாளருக்கான பல விருதுகளை பெற்று உள்ளேன். சகோதரி என்ற அறக்கட்டளை நிறுவி பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு சேவை செய்து வருகிறேன். 

அதுமட்டுமல்லாமல் திருநங்கைகளின் திறமைகளை உலகம் அறியவும், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த கலை மற்றும் ஓவிய பயிற்சியை கடந்த 5 ஆண்டுகளாக அவர்களுக்கு அளித்து வருகிறேன். 

இந்தநிலையில் அமெரிக்க நாட்டில் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் எங்களிடம் ஓவியம் பயிற்சி பெறும் 7 திருநங்கைகள், ஒரு திருநம்பி உட்பட 8 பேரின் ஓவியங்களை அனுப்பி வைத்தோம். அவர்கள் அதனை தேர்வு செய்து கண்காட்சியில் வைக்க உள்ளனர். 

இந்த கண்காட்சி அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் 20- ந்தேதி வரை 6 மாதம் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் இடம்பெறும் உலகம் முழுவதிலும் உள்ள திருநங்கைகள் வரைந்த ஓவியங்களுக்கு இடையே தமிழகத்தைச் சேர்ந்த 8 திருநங்கைகளின் ஓவியங்கள் இடம் பெறுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது." இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments