பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!! தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் அறிவுரை!!

 -MMH

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் புதிய, பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. இதை தவிர குடிநீர் தேவைக்கும், ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

 இந்த நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் முதல் போகத்தில் நெல் அறுவடை முடியும் தறுவாயில் உள்ளது. இந்த நிலையில் 2-ம் போக நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் லீலா, உதவி பொறியாளர்கள் அக்பர் அலி, கார்த்திக் கோகுல் மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

"ஆழியாறு அணையில் இருந்நது பழைய ஆயக்கட்டு பாசனத்தில் காரப்பட்டி, பள்ளிவிழங்கால், பெரியணை, வடக்கலூர், அரியாபுரம், ஆகிய 5 வாய்க்கால்கள் மூலம் பாசனம் நடைபெறுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 6,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இன்று (நேற்று) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முடிய 182 நாட்களுக்கு 1,235 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்."

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments