மகாத்மா காந்தியின் அறிவுரைப்படிதான், சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினாரா? வரலாற்றை திரிக்க முயலும் பாஜக!

-MMH

     கடந்த 13-ம் தேதி, டெல்லியில் நடைபெற்ற `சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "மகாத்மா காந்தியின் அறிவுரைப்படிதான், சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினார்" என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், சாவர்க்கரின் கருணை மனுக்கள் தொடர்பான உண்மை வரலாற்றைத் தேடிச்செல்வது அவசியமாகிறது.

``சாவர்க்கர் இந்திய வரலாற்றின் அடையாளம். அவரைப் பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவரை தாழ்த்திப் பார்ப்பது ஏற்புடையது அல்ல. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய அவருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் சாவர்க்கர் ஒரு ஃபாசிஸ்ட் என்று முத்திரை குத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல், சாவர்க்கர் பற்றித் தொடர்ச்சியாகப் பொய்கள் பரப்பப்பட்டுவருகின்றன. அவர் சிறையிலிருந்து, தான் விடுவிக்கப்பட வேண்டும் எனப் பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு மன்னிப்புக் கடிதங்கள் எழுதினார் என்று குறிப்பிடப்பட்டுவருகிறது. ஆனால், மகாத்மா காந்தி அறிவுறுத்தலின்படிதான் அவர் மன்னிப்புக் கடிதங்கள் எழுதினார்" என பாஜக அரசின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி கருத்து கூறிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், ``சாவர்க்கர் செல்லுலர் சிறையில் இருந்தபோது, மகாத்மா காந்தி வர்தா சிறையில் இருந்தார். அந்தச் சமயத்தில் சாவர்க்கரை, காந்தி எப்படித் தொடர்புகொண்டார்?" எனக் கேள்வி எழுப்பியவர், ``பாஜக-வினர் புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுகின்றனர். சாவர்க்கர் சிறையில் இருந்தபடியே பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பினார். பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பி, கருணை பெற்ற பின்னரே சிறையிலிருந்து வெளியே வந்தார். 1925-ல் சிறையிலிருந்து வெளியில் வந்ததும் தேசப் பிரிவினைக் கோட்பாட்டை முதலில் பரிந்துரைத்தவர் சாவர்க்கர்தான்!" எனக் காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.

மக்களவை உறுப்பினராகிய அசாதுதீன் ஒவைசி ``பாஜக-வினர் வரலாற்றை சிதைப்பதைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள். மகாத்மா காந்தியை நீக்கிவிட்டு சாவர்க்கரை தேசத்தின் தந்தையாக்கிவிடுவார்கள்’’ என விமர்சனம் செய்திருக்கிறார். இதேபோல் இதர அரசியல் கட்சித் தலைவர்களும் 'காந்தியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்படி, தொடர்ச்சியாகப் பல்வேறு பொய்களை பா.ஜ.க தலைவர்கள் பரப்புகின்றனர்' என குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மூன்றுநாள் பயணமாக அந்தமான் சென்றிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``சாவர்க்கரின் வாழ்க்கையை ஒருவர் எப்படிச் சந்தேகப்பட முடியும்? தேசத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனைகளை அனுபவித்த சாவர்க்கர், சிறையில் மாட்டைப்போல் செக்கிழுத்தார். அவரைப் பற்றிப் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும்" என பதில் தெரிவித்திருக்கிறார்.

1911ஆம் ஆண்டு அந்தமான் செல்லுலர் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் மொத்தம் ஆறு மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதியிருக்கிறார் என வரலாற்று ஆய்வாளர்கள் பலர் ஆதாரங்களுடன் கூறுகின்றனர்.

குறிப்பாக, வழக்கறிஞரும், எழுத்தாளருமான ஏ.ஜி.நூரானி, ``1911, ஜூலையில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் செல்லுலர் சிறையில் அடைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் சாவர்க்கர் தனது முதல் மன்னிப்புக் கடிதத்தைச் சமர்ப்பித்தார். 1913, நவம்பரில் சாவர்க்கர் தனது இரண்டாவது மன்னிப்புக் கடிதத்தைச் சமர்ப்பித்தார். 1914, 1918 ஆகிய ஆண்டுகளில் சாவர்க்கர் எழுதியதாகக் கூறப்படும் மன்னிப்புக் கடிதம் பற்றி 1920-ம் ஆண்டு, சட்டமன்றத்தில் உள்துறை உறுப்பினர் சர் வில்லியம் வின்சென்ட் குறிப்பிட்டிருக்கிறார்” எனப் பதிவு செய்திருக்கிறார். 

மேலும், ``மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து 1914ஆம் ஆண்டு, டிசம்பர் 19ஆம் தேதி புறப்பட்டு 1915ஆம் ஆண்டு, ஜனவரி 9ஆம் தேதிதான் இந்தியாவுக்கு வருகை தந்தார். அவரது வருகைக்கு முன்பே சாவர்க்கர் இரு முறை கருணை மனுக்களை எழுதியிருக்கிறார்" என ஓர் ஆங்கில நாளேட்டுக்கு எழுதிய கட்டுரையில் விவரித்திருக்கிறார்.

அதேபோல, சாவர்க்கர் பற்றி ஆய்வுகள் செய்துவரும் நிரஞ்சன் தக்லே என்பவர், ``1911, ஜூலை 11ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது, ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கடிதத்தை எழுதினார். அதன் பிறகு ஒன்பது ஆண்டுகளில், அவர் ஆறு முறை மன்னிப்புக் கடிதங்களைக் கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், 1924ல் சாவர்க்கர் தனது ஆறாவது மன்னிப்புக் கடிதத்தை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதியிருக்கிறார்" என ஒரு சர்வதேச ஆங்கில ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல் இன்னொரு கடிதத்தில், `பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கைகள், அரசியலமைப்பு முறைகள் எனக்கு நம்பிக்கையை உண்டாக்கியிருக்கின்றன. இப்போது வன்முறையின் பாதையைக் கைவிட்டுவிட்டேன்’ என சாவர்க்கர் கடிதம் எழுதியதாகவும், அதன் விளைவாக 1919, மே 30, 31 ஆகிய இரு தேதிகளில் அவருடைய மனைவி, தம்பிகளைப் பார்க்க அந்தமான் சிறையிலிருந்த சாவர்கருக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் நிரஞ்சன் தக்லே கூறியிருக்கிறார்.

மேலும், சாவர்க்கர் இன்னொரு கடிதத்தில் ``சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள். அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்குச் சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்டவில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கே சென்று நிற்பேன்!" எனப் பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சாவர்க்கர் தனது ஐந்தாவது கடிதத்தில் தன் மீது கருணை காட்டுமாறும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட மாட்டேன் என்றும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், சாவர்க்கர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்துக்காகப் பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.

அதேவேளையில், 15 நாட்களுக்கு ஒரு முறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது.

இதன் விளைவாகவே, சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, 1921, மே மாதம் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள சிறைக்கு மாற்றப்பட்டார் எனக் கூறப்படுகிறது. மேலும், 1924ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதிய ஆறாவது கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், `எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக் கூடாது; ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தைவிட்டு வெளியேறக் கூடாது, அடுத்த ஐந்து வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது’ போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில், 1924, ஜனவரி 6ஆம் தேதி சாவர்க்கர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

உண்மையில் சாவர்க்கர் சிறைக்குச் சென்றது 1911ஆம் ஆண்டு. ஆனால் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தது 1915ஆம் ஆண்டு. அதாவது, காந்தி இந்தியா திரும்பும் முன்னரே, சாவர்க்கர் 1911, 1913, 1914 ஆகிய ஆண்டுகளில் தனது மூன்று மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.

காந்தி சேவாகிராம் ஆசிரமத்திலுள்ள பதிவுகளின்படி, 1920ல் சாவர்க்கரின் இளைய சகோதரர் நாராயணன் சாவர்க்கர், தங்கள் சகோதரரின் விடுதலைக்கு உதவுமாறு மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார். 1920, ஜனவரி 25ஆம் தேதி அதற்கு பதிலளித்து கடிதம் எழுதிய காந்தி, ``உங்கள் சகோதரர் செய்த குற்றம் முற்றிலும் அரசியல் சார்ந்தது என்ற உண்மையைத் தெளிவுபடுத்தி, வழக்கின் உண்மைகளை முன்வைத்து ஒரு மனுவை உருவாக்குங்கள்" என்று அறிவுறுத்தினார். மேலும், ``முன்பு நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதுபோல், நான் எனது வழியில் இந்த விஷயத்தில் நகர்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் எந்த இடத்திலும் சாவர்க்கரை கருணை மனு அல்லது மன்னிப்புக் கடிதம் எழுதும்படி காந்தி அறிவுறுத்தவில்லை. சாவர்க்கரின் இளைய சகோதரர் உதவி கேட்டு தனக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதில் எழுதிய காந்தி, ஒரு மனுவைத் தாக்கல் செய்யுமாறு சகோதரர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். அதற்கு முன்பாகவே பலமுறை சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியிருக்கிறார். எனவே, காந்தி சொல்லித்தான் சாவர்க்கர் கருணை மனுவை எழுதியதாக ராஜ்நாத் சிங் கூறியிருப்பதில் உண்மை இல்லை என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ராயல் ஹமீது, பாரூக்.

Comments