பண்டிகைக்கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை!!

 

  -MMH

   தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் கூடும் கூட்டத்தில் திருட்டு நடப்பதை தவிர்க்க, கோவையில் போலீசார் சட்டையில் கேமரா பொருத்தி, கண்காணித்து வருகின்றனர்.தீபாவளிக்கு இன்னும், 9 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் அடாது மழையிலும் விடாது திரண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார், 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக தீபாவளி கூட்டத்தில் புகுந்து பொதுமக்களிடம் பணம், நகைகளை திருடுவதும் அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவையில் முகாமிட்டுள்ள பிக்பாக்கெட், ஜேப்படி ஆசாமிகள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.திருட்டு தடுக்க, மாறுவேடத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வலம் வரும் போலீசார், திருட்டு ஆசாமிகளை மடக்கிப்பிடித்து, கைது செய்து வருகின்றனர்.

மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, அங்கிருந்து திருடர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கின்றனர்.நேற்று முதல், மாநகர போலீசார் சட்டையில் அணிந்த கேமராக்களுடன் வலம் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களை 'அலர்ட்' செய்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 'பெண்கள் கடை வீதிக்கு வரும்போது, விலை உயர்ந்த நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments