கோவை பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..!!

  -MMH

   மாவோயிஸ்டுகளுடன் தொடா்பில் இருந்த கோவையைச் சோந்த மூவரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் மாவோயிஸ்ட்களுடன் தொடா்பில் இருக்கும் 23 நபா்களின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சுங்கம், புலியகுளம் மற்றும் பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.


கோவை புலியகுளம் பகுதியில் வசித்து வந்த மாவோயிஸ்ட் ஆதரவாளா் தினேஷ் மற்றும் சுங்கம் பகுதியில் வசித்து வந்த டேனிஷ் ஆகியோரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரள போலீஸாா் கைது செய்து கேரள சிறையில் அடைத்துள்ளனா்.

இந்நிலையில் இவா்களது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

அதேபோல பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியிலுள்ள சந்தோஷ் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையிட்டனா்.

சந்தோஷ் என்பவா் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் சந்தோஷ் காணாமல் போனதாக அவரது தந்தை ஆழியாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இந்நிலையில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சந்தோஷுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் மாவோயிஸ்ட் இயக்கத்தினருடன் கேரளத்தில் பதுங்கி இருந்து வருகிறாா்.

அவா் மீது கேரளத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சந்தோஷின் குடும்பத்தினா் மற்றும் நண்பா்களிடம் என்ஐஏ அதிகாரிகள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும் மூவரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் செல்லிடப்பேசி, சிம்காா்டு, புத்தகம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments