மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்திய மலைவாழ் மக்கள்!! வழிபாடு முடிந்த சிறிது நேரத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் அம்மக்கள் மகிழ்ச்சி!!

   -MMH

கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அட்டுக்கல் என்ற மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் காவல் தெய்வம் வேட்டைக்காரன் கோவில் ஆகும். வனப்பகுதியில் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மழைவேண்டி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை.  

தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் கோவிலில் திருவிழா நடத்த வனத்துறை அனுமதி அளித்தது. அதன்படி திருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. தொடர்ந்து, வேட்டைக்கார சுவாமியை ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக குடியிருப்பு பகுதியில் உள்ள கோவிலில் இருந்து வேட்டைக் கார சுவாமியை மண்சிலை வடிவம் செய்து அதை பல்லக்கில் வைத்தனர். அப்போது மலைவாழ் மக்கள் தங்களின் பாரம்பரிய இசைக்கருவி களை இசைத்தபடி சுவாமிக்கு அருள் வரவழைத்து மேள, தாளத்துடன் பட்டாசு வெடித்து சுவாமியை அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.‌ 

இதில், கண் கட்டப்பட்ட நிலையில் குதிரையில் வேட்டைக்கார சுவாமியை அமரவைத்து, பல்லக்கை பக்தர்கள் சுமந்து  சென்று, மலைக்கோவிலை அடைந்தனர். மேலும், மலைக்கோவிலில்  கண்திறக்கும் முக்கிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வேட்டைக்காரன் சுவாமி கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மழை வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது உடனடியாக வானத்தில் கருமேகம் சூழ்ந்தது.  பின்னர் மழை பெய்யத்தொடங்கியது. அப்போது கனமழை கொட்டித் தீர்த்ததால் மலைவாழ் மக்கள் பக்தி பரவசமடைந்து சுவாமியை தரிசித்து ஆரவாரத்துடன் மகிழ்ச்சி பொங்க மழையில் நனைந்தபடி நடனமாடினார்கள்.  தொடர்ந்து கிடா வெட்டி ஊர்மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அட்டுக்கல் மலைவாழ் கிராம மக்கள் செய்து உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments