தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் உள்ள ரேஷன் கடையை உடைத்து நாசப்படுத்திய காட்டுயானைகள்!அச்சத்தில் அப்பகுதி மக்கள்!!

 -MMH

வால்பாறை மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவை அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக ரேஷன்கடைகளை உடைத்து அதில் இருக்கும் பொருட்களை எடுத்து சாப்பிட்டு சேதப்படுத்தி வருகின்றன. 

இந்த நிலையில் வால்பாறை அருகில் உள்ள தாய்முடி எஸ்டேட் (எம்.டி) பிரிவு தொழிலாளர்கள் குடியிருப்புக்குள்  7 காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் அங்குள்ள மகளிர் சுயஉதவிக்குழு ரேஷன் கடையின் கதவுகளை உடைத்தது. 

தொடர்ந்து கடைக்குள் இருக்கும் அரிசி மூட்டைகளை துதிக்கை யால் எடுத்து வெளியே வைத்து சாப்பிட்டு சேதப்படுத்தின. இதை பார்த்த தொழிலாளர்கள் இது குறித்து மானாம்பள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. ஆனால் அவை தொடர்ந்து குடியிருப்பு பகுதி அருகே முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். 

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: 

வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானைகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதி அருகே முகாமிட்டு இருப்பதால் பீதி ஏற்பட்டு உள்ளது. மேலும் யானைகள் கூட்டத்தில் 2 குட்டிகள் இருப்பதால் அவை ஆக்ரோஷத்துடன் சுற்றுகின்றன. 

எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தாய்முடி பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் ஆனைமுடி, நல்லமுடி எஸ்டேட் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

நாளை வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம் .

Comments