விஜய் வசந்த் எம்.பி.யுடன் மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு...!!

 -MMH

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோரை குமரி மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டி  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோரை தேங்காய்ப்பட்டணம் ஹார்பர் டெவலப்மெண்ட் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னதுறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை, முள்ளூர் துறை, ராமன்துறை, இணையம் புத்தன்துறை இணையம், சின்னத்துறை, மேல்மிடாலம் மற்றும் மிடாலம் கடற்கரை கிராமங்களின் மீனவர் பிரதிநிதிகள்  சந்தித்து ஆலோசனை நடத்தினர்.  

இந்த ஆலோசனையின் போது தேங்காய்ப்பட்டணம் துறைமுகம் ஆனது கடற்கரை மற்றும் கடலின் தன்மைக்கு ஏற்ப அமைக்கப்படாததால் இதுவரை 26 மீனவர்கள் தங்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளனர்.  விழிஞ்சம் மற்றும் இங்கு உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகம் பாதுகாப்பாக அமைந்துள்ளது.

அதுபோல, பருவமழை காலத்தில் ஏற்படும் கடல் சீற்றத்தை கணக்கில் கொண்டு 45 டிகிரி கோண வடிவில் 450 மீட்டர் நீளத்தில் பிரதான கடல் தடுப்பு சுவர், கடற்கரை கரைக்கு லைனுக்கு இணையாக 450 மீட்டர் நீளத்திற்கு பிரதான தடுப்பு சுவர் மற்றும் 120 மீட்டர் நுழைவு வாயிலை தெற்கு - வடக்கு திசையில் துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்து எல்லா காலங்களிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய வகையில் இந்த துறைமுகத்தை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 தற்போது உள்ள துறைமுக நுழைவுவாயிலின் மணல் குவியலை போர்க்கால அடிப்படையில் மீனவர்கள் தொழில் செய்ய அப்புறப்படுத்தி தர வேண்டும் என்று மனு அளித்தனர். 

இந்த ஆலோசனையின் போது காங்கிரஸ் மாநில செயலாளர் எம். எஸ் காமராஜ், தொழில்நுட்ப அறிவியல் அலோசகர் சுனில் சபரியார், கிறிஸ்துதாஸ், கென்னடி, பிராக்கிளின், தாஸ், மெல்ஜின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-ஆர்.கே.பூபதி.

Comments