பூக்கள் மற்றும் காய்கறிகள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்! விலை அதிகரிப்பால் மக்கள் வேதனை!

 

-MMH

      ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் மாவிலை தோரணம் கட்டி வழிபடுவார்கள். மேலும் வாழைக்கன்று, கரும்பு வைத்தும் பூஜை செய்வார்கள். பொள்ளாச்சியில் சத்திரம் வீதி, காந்தி மார்க்கெட், தேர்நிலை திடல் மார்க்கெட் பகுதிகளில் நேற்று கரும்பு, வாழைக்கன்றுகள் மற்றும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

இதன் காரணமாக சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சில்லறை விலைக்கு ஒரு ஜோடி கரும்பு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.30-க்கு விற்பனை ஆனது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விற்பனை குறைந்து இருந்தது.

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வழக்கமாக ஆயுதபூஜையையொட்டி 7 டன் வரை பூக்கள் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மழையின் காரணமாக 4 டன் பூக்கள் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் கொரோனா காரணமாக கேரளாவில் இருந்து பெரும்பாலான வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக வரத்து குறைந்தும் விற்பனை மந்தமாக இருந்தது.

மல்லிகை ஒரு கிலோ ரூ.650 முதல் ரூ.700 வரையும், செவ்வந்தி ரூ.200 முதல் ரூ.250 வரையும், அரளி ரூ.400 முதல் ரூ.450 வரையும், பட்டுப்பூ ரூ.50 முதல் ரூ.60 வரையும், சம்பங்கி ரூ.300 முதல் ரூ.350 வரையும், முல்லை ரூ.400 முதல் ரூ.450 வரையும், ஜாதிப்பூ ரூ.400-க்கும், சில்லி ரோஸ் ரூ.200-க்கும், துளசி ரூ.40-க்கும் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆயுதபூஜையையொட்டி காய்கறிகள் விலை குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவதால் வழக்கத்தை விட காய்கறிகள் விலை அதிகமாக உள்ளது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பு காரணமாக காய்கறிகள் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விலை அதிகமாக இருப்பதாலும் பொதுமக்கள் குறைந்த அளவே காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கதை விட 20 சதவீதம் காய்கறிகள் விலை அதிகமாக உள்ளது.

தக்காளி ஒரு பெட்டி ரூ.450-க்கும், ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.15 முதல் ரூ.30-க்கும், வெண்டைக்காய் ரூ.15 முதல் ரூ.30-க்கும், பாகற்காய் ரூ.15 முதல் ரூ.20-க்கும், புடலைங்காய் ரூ-.25-க்கும், பீர்க்கன்காய் ரூ.25-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும், பூசணிக்காய் ரூ.10-க்கும், சின்ன வெங்காயம் ரூ.10 முதல் ரூ.25-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25 முதல் ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்  

-S.ராஜேந்திரன்.

Comments