பொள்ளாச்சி வழியாக இரயில் வேண்டும்!! - டிஜிட்டல் கையெழுத்து இயக்கம்..!!

 -MMH

கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு மீண்டும் ரயில்கள் இயக்கக்கோரி, 'டிஜிட்டல்' வழியாக, 1,600க்கும் மேற்பட்டோர் கையெழுத்து இட்டுள்ளனர்.

போத்தனுார் - பொள்ளாச்சி இடையேயான, 40 கி.மீ., தொலைவிலான 'மீட்டர் கேஜ்' ரயில் பாதை சில ஆண்டுகளுக்கு முன்பு, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.

தொடர்ந்து கோவையில் இருந்து பொள்ளாச்சி பழநி மதுரைக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன. பயணிகளிடம் பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து  இவ்வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவை, 90 சதவீதம் தமிழகத்தில் மீண்டும் துவங்கியுள்ளது.

ஆனால், கடந்தாண்டு மார்ச் முதல் இதுவரை போத்தனுார் - பொள்ளாச்சி வழித்தடத்தில் எந்த பயணிகள் ரயில்களும் இயக்கப்படவில்லை.ஏற்கனவே, கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் என தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களை, மீண்டும் இயக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

ரயில்வே நிர்வாகம் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத நிலையில், பயணிகள், ரயில்வே ஆர்வலர்கள் என பலரும் இணைந்து 'டிஜிட்டல்' வழி கையெழுத்து இயக்கத்தை துவங்கியுள்ளனர்.துவங்கிய ஓரிரு நாட்களில், https://chng.it/Wx8pf7WL என்ற இணையதளத்தில், 1,600க்கும் மேற்பட்டோர் கையெழுத்து இட்டுள்ளனர்.

சேலம் ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும், ஏ1 அந்தஸ்து பெற்ற கோவை ஸ்டேஷனில் இருந்து, பொள்ளாச்சி வழியாக ரயில்களை அதிகரிக்க வேண்டும் என்பது கொங்கு மண்டலத்தின் எதிர்பார்ப்பு.அதற்கு வலுசேர்க்கும் விதமாக பயணிகள், ரயில்வே ஆர்வலர்கள் நுாதன போராட்டம் வாயிலாக கரம் கோர்த்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments