சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை! ஆர்வ மிகுதியால் ஆபத்தை உணராத சுற்றுலாபயணிகள்! !

 -MMH

மலைப்பிரதேசமான வால்பாறையில் அவ்வப்போது லேசான மழையும், வெயிலும் கலந்த இதமான காலநிலை நிலவுகிறது. மேலும் மழை காரணமாக பசுமை திரும்பி உள்ளது. இதனால் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோரத்தில் புற்கள் முளைத்து உள்ளன. 

இதன் காரணமாக அவற்றை சாப்பிட காட்டெருமைகள், மான் கள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்ந்து சென்று வருகின்றன. குறிப்பாக வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டெருமைகள், சாலையோரத்தில் இருபுறத்திலும் முளைத்து உள்ள புற்களை மேய்ந்து வருகிறது. 

இதனால் அவை அடிக்கடி தனது குட்டிகளுடன் சாலையை கடந்து செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அவற்றை பார்த்ததும் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து வருகிறார்கள். 

மேலும் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி ஹார்ன் அடித்து அந்த வனவிலங்குகளுக்கு இடையூறு செய்து வருகிறார்கள். குறிப்பாக கூட்டங்கூட்டமாக நிற்கும் காட்டெருமைகளை அவர்கள் இடையூறு செய்வதால் அவை தாக்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தற்போது வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. திரும்பிய இடம் எல்லாம் பச்சை பசேலென இருப்பதால் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வனப்பகுதிக்குள் சென்று புகைப்படம் எடுக்கிறார்கள். 

மேலும் அங்கு  மேய்ந்து கொண்டு இருக்கும் வனவிலங்குகளை யும் தொந்தரவு செய்கிறார்கள். இதனால் மிரண்டு ஓடும் அவை, எஸ்டேட் தொழிலாளர்களை தாக்கக்கூடிய நிலை நீடித்து வருகிறது. இதனால் அவர்கள் பயத்துடன் வேலை செய்து வருகிறார்கள். எனவே வனவிலங்குகளை தொந்தரவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்துவது, வனவிலங்குகளுக்கு தின்பண்டங்களை போடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments