குழாய்களில் இயற்கை எரிவாயு வினியோகிக்கும் திட்டம் ! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! !

 

  -MMH

   கோவை மாவட்டத்தில், குழாய்களில் இயற்கை எரிவாயு வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் உரிமையை, இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. 9.12 லட்சம் வீடுகளுக்கு குழாய்களில் காஸ் இணைப்பு என்ற இலக்குடன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக, கோவை நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. இத்திட்டத்துக்காக, பிச்சனுார் பகுதியில், 'சிட்டி கேட் ஸ்டேஷன்' எனப்படும் இயற்கை எரிவாயு இருப்பு மையம் கட்டப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குழாய்கள் மூலமாக காஸ் வினியோகிக்கப்பட உள்ளது.

இதற்காக, கோவை நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி மற்றும் கிராம ஊராட்சி சாலைகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. தற்போது, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 160 கி.மீ.,க்கு இரும்புக் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. அதன்பின் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, காஸ் வினியோகிப்பதற்கு 'பாலி எத்தலின்' குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் 500 கி.மீ.,க்கு இந்த குழாய்களைப் பதித்து, ஒவ்வொரு கட்டமாக இத் திட்டத்தை விரிவுபடுத்த, இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கோவை மேலாளர் சுரேஷ் கூறுகையில், ''வீடுகளுக்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயு மிகவும் பாதுகாப்பானது; செலவும் குறைவானது. தற்போது காஸ் சிலிண்டர்களுக்கு ஏற்படும் செலவை விட 20 சதவீதம் குறைவாகவே இதற்கு செலவாகும். ''தொழிற்சாலைகளில் இதனால் 50 சதவீதம் வரை எரிபொருள் செலவு குறையும். 10 ஆண்டுகளுக்குள் 9 லட்சம் குழாய் காஸ் இணைப்பு என்ற இலக்கில் செயல்படுகிறோம்,'' என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments