விமானப்படை அதிகாரியை போலீசார் விசாரிக்கலாம்!! நீதிமன்றம் உத்தரவு!!

 -MMH

கோவை ரெட் பீல்டில் உள்ள விமானப்படை கல்லூரியில் 30-க்கும் மேற்பட்ட ஆண், பெண் அதிகாரிகள் பயிற்சிக்காக வந்தனர். இதில் டெல்லியை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை, மற்றொரு அதிகாரி யான அமிதேஷ் ஹர்முக் பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து விமானப்படை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விமானப்படை அதிகாரி அமிதேஷ் ஹர்முக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே விமானப்படை தாக்கல் செய்த மனுவை விசாரித்த கூடுதல் மகளிர் கோர்ட்டு நீதிபதி, அதிகாரி அமிதேஷ் ஹர்முக்கை விமானப்படையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். கோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து போலீஸ் தரப்பில் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் கடந்த 7-ந் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகராஜன், கோவை மாநகர போலீசார் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கலாம். ஆனால் விமானப்படை அதிகாரி அமிதேஷ் ஹர்முக் விமானப்படையின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார். போலீசார் அவரை விசாரிக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே விமானப்படை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். 

போலீசாரின் தகவல் கிடைத்ததும் விசாரணைக்கு ஏற்ற சூழலை விமானப்படை வளாகத்தில் உருவாக்கி தர வேண்டும். விசாரணை யின் போது போலீசாருக்கு எவ்வித இடையூறும் விமானப்படை ஏற்படுத்த கூடாது.

விசாரணை முடிந்த பின்னர் போலீசார் அதற்கான ஆவணங்களை தயார் செய்ய வேண்டும். அதில் ஒரு நகலை விமானப்படை அதிகாரிகளிடமும், மற்றொன்றை கோர்ட்டிலும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments