சிங்கம்புணரியில் வேகமாகப் பரவுகிறதா டெங்கு?! ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் பொதுமக்கள்!!

 -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 15 நாட்களில் ஒரு சிலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டெங்கு பாதித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

பருவமழை துவங்கி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக சிங்கம்புணரியில் நல்லமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி, குடியிருப்பு பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது.

கொசுக்கள் அதிகரித்து காய்ச்சல் மற்றும் சளியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கொசு முட்டை, புழுக்களை அழிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிங்கம்புணரி பேரூராட்சி நிர்வாகம் சரிவரச் செயல்படவில்லை எனவும், பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை உண்டாக்கவில்லை எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

டெங்குக் காய்ச்சலிலிருந்து மக்களை பாதுகாக்க சிங்கம்புணரி தாலுகா முழுவதும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் சுகாதாரத்துறையினருடன் இணைந்து அவர்களது வழிகாட்டுதல்படி மேற்கொள்வார்களா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேவேளையில் பருவமழை துவங்கி உள்ளநிலையில், பொதுமக்களும் தங்கள் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருத்தல், கழிவுப் பொருட்களில் மழை நீர் தேங்காமல் பாதுகாத்தால், காய்ச்சிய நீரை வடிகட்டி பருகுதல், பகலில் கொசுக்கடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தமக்குத் தாமே மேற்கொண்டால் டெங்குக் காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாமென பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

- சிவகங்கை மாவட்ட நிருபர்கள் குழு.

Comments