எஸ்.எஸ்.கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பொருட்கள் திருடியவர் கைது!

 

-MMH

      மதுரை மாவட்டம், மேலூரிலிருந்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வரையிலான 45.9 கிலோ மீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் செல்லும் முதல் நான்கு வழிச்சாலையாக இந்தச் சாலை அமைய உள்ளது.

இந்த நான்குவழிச் சாலையில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள எம்.கச்சைப்பட்டி அருகே பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்கள் இறக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுமானப் பொருட்களை தொடர்ந்து யாரோ திருடுவதாக எஸ்.எஸ்.கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் சென்றபோது, கட்டுமானப் பொருட்களை திருடிக்கொண்டிருந்த ஒரு நபரை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட நபரிடம் எஸ்.எஸ்.கோட்டை கால்நிலைய ஆய்வாளர் அந்தோணி செல்லத்துறை விசாரணை மேற்கொண்டதில், அவர் ஒப்பிலான்பட்டியை சேர்ந்த வாசுதேவன் மகன் ஜெயராமன் என்ற ஆறுமுகம்(25) என்பதும், கட்டுமானப் பொருட்களை தொடர்ந்து திருடி வந்தது அவர்தான் என்பதும் தெரியவந்தது.

விசாரணையின் பின்பு ஜெயராமன் என்ற ஆறுமுகத்தை கைது செய்த எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி பரமக்குடி கிளைச் சிறையில் அடைத்தனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments