பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு!! சொத்தை பிரித்து தராத தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!!

 -MMH

கோவையை அடுத்த வேலாண்டிபாளையம் அருகே உள்ள ராமசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 85). இவர் தேசிய பஞ்சாலையில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விசாலாட்சி (74).

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனியாக பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருகிறார். 2-வது மகனான அருண்குமார் (47) வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். மகன்கள் 2 பேருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.  

இந்த நிலையில் அருண்குமார் தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோரிடம் அடிக்கடி வலியுறுத்தி உள்ளார். அத்துடன் தனக்கு சேரவேண்டிய சொத்தை பிரித்து கொடுக்கவும் கூறி உள்ளார். இதனால் தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. 

இதற்கிடையே அருண்குமார், தனது தந்தையிடம் சொத்தை பிரித்து கொடுக்கும்படி கூறி உள்ளார். அதற்கு அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.  

இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார், தனது தந்தையை பிடித்து தள்ளினார். அதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததும், அவரின் தலையை பிடித்து தரையில் ஓங்கி பலமுறை அடித்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த மயில்சாமி ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதை பார்த்ததும் அருண்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். 

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மயில் சாமியை, விசாலாட்சி மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி  அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சாய்பாபாகாலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய அருண்குமாரை தேடினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.  

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments