மருது சகோதரர்களின் படத்தை தமிழ்நாடு சட்டசபையில் வைக்க, வாரிசுகள் கோரிக்கை!! கோரிக்கை நிறைவேற்றப்படும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!

  -MMH

   மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகள்.

ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதிவரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்து குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.

மருது சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 1801 அக்டோபர் 24இல் தூக்கிலிடப்பட்டனர். எனவே, மருது சகோதரர்களின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

மருது சகோதரர்கள் நினைவை அனுசரிக்கும் விதத்தில் திருப்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் மருதுபாண்டியர்களின் சிலைக்கு, நேற்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைசர் கே.ஆர்.பெரியகருப்பன் மாலையணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

"வாய்ப்பு ஏற்படுகிற பட்சத்தில், முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, மருதுபாண்டியர்களின் படம் சட்டசபையில் இடம் பெறச் செய்ய வேண்டுமென்ற வாரிசுகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும். அது எங்கள் கடமை. இங்கு அமைந்துள்ள முழு உருவச் சிலையும் திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதுதான். விதிகளுக்கு உட்பட்டு மருதுபாண்டியர்களின் முழு உருவச் சிலை அமைக்க கோரிக்கை எழும் பிரதான நகரங்களில் முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி அது நிறைவேற்றப்படும். ஊரகப் பகுதி உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடைபெற்று முடிவடைந்து உள்ளது. நடைபெற வேண்டிய நகர்ப்புறங்களுக்கான தேர்தல் அறிவிப்பு, தேர்தல் ஆணையத்தால் முறையாக வெளியிடப்படும். அப்போது நகராட்சித் தலைவர்களின் தேர்தல் மறைமுகத் தேர்தலா? நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுவார்களா? எனத் தெரிந்து கொள்ளலாம். நகராட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நேரடியாகவும் இருக்கலாம். மறைமுகமாகவும் இருக்கலாம். தேர்தலின் போது இரண்டில் ஒன்று நிச்சயமாக நடக்கும்", என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் திமுக பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நினைவு தினத்தை முன்னிட்டு, மருதுபாண்டியர்கள் மணிமண்டபம் மற்றும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் வர்ணம் பூசி, வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதே போல், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடதில் வருகிற 27ந் தேதி குரு பூஜை விழா நடைபெறுகிறது. அன்றைய தினமும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்பதால் அங்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

- ராயல் ஹமீது. 

Comments