சிங்கம்புணரி அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது!

 -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரி அருகே உள்ள கல்லம்பட்டி செருதப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர் மகள் பஞ்சு (21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அழகுசாமி மகன் வைரமுத்து (24) என்பவரை கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருங்கிப் பழகியநிலையில், வைரமுத்து பஞ்சுவை திருமணம் செய்ய மறுப்பதாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு பஞ்சு, திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வைரமுத்துவை அழைத்து விசாரித்தபோது, பஞ்சுவை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அருகிலுள்ள ஒரு கோயிலில் வைத்து தாலி கட்டியுள்ளார்.

பின்னர் பஞ்சுவை அவரது வீட்டில் விட்டு விட்டு, இவர் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் வைரமுத்து வீட்டிற்கு பஞ்சு சென்றபோது, வைரமுத்தின் தாய் மற்றும் தம்பிகள் அவரை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து மீண்டும் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளவும், தன்னை வைத்து வாழவேண்டுமென சில தினங்களுக்கு முன்பு பஞ்சு வைரமுத்துவிடம் கேட்டுள்ளார். அதற்கு வைரமுத்து மற்றும் அவரது குடும்பத்தார்கள் பஞ்சுவை மிரட்டியுள்ளனர். 

இதனையடுத்து திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், 'தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி வைரமுத்து ஏமாற்றியதாகவும், தனக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து இரண்டு முறை கருவை கலைத்ததாகவும்' பஞ்சு மீண்டும் புகாரளித்தார். இதனையடுத்து இதுகுறித்த விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செளதாம்பாள் வைரமுத்து, அவரது நண்பர் சித்திரை குமார் (21), அவரது தாயார் காசியம்மாள் (48), மாமா நொண்டிச்சாமி (35), தம்பிகள் கோவிந்தராஜன் (20), மணி (22),  அண்ணன் வெங்கட்ராமன் (28) ஆகிய 7 பேர் மீது திருப்பத்தூர்  வழக்குப்பதிவு செய்தார். 

அதன்பின்பு வைரமுத்து கைது செய்யப்பட்டு திருப்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு பதியப்பட்ட மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments