கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்!! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!!

 -MMH

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி- உடுமலை ரோடு மரப்பேட்டை வீதியில் ரேஷன் மூட்டைகள் கிடப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பொள்ளாச்சி நகர பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு பொதுமக்களிடம் இருந்து வாங்கி, அதை அதிக விலைக்கு கேரளாவில் விற்பனை செய்வதற்கு முயற்சி செய்தது தெரியவந்தது.

ஒரு மூட்டைக்கு 50 கிலோ வீதம் மொத்தம் 50 மூட்டைகளில் 2500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டன் (வயது 44) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments