ரயில்வே ஆர்வலர்கள் அதிருப்தி ! கோட்டத்தை மாற்ற கோரிக்கை வைக்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்! !

  -MMH

   பொள்ளாச்சி ரயில்வே பகுதிகளை, பாலக்காடு கோட்டத்தில் இருந்து மீட்டு, சேலம் அல்லது மதுரை கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் தீவிரமடைந்துள்ளது. அதற்கான காரணங்கள் ஏராளம் என்கின்றனர் ரயில்வே ஆர்வலர்கள்.

பொள்ளாச்சி சந்தையின் வர்த்தக முக்கியத்துவம் கருதி, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், 1890ம் ஆண்டு பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. பொள்ளாச்சி சந்தையும், ரயில்வேவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருந்து, வர்த்தக, பொருளாதார வளர்ச்சிக் பெரும்பங்கு ஆற்றின. தெற்கு ரயில்வே உருவாகி, கோட்டங்கள் பிரிக்கப்பட்ட போது, மதுரை கோட்டத்தில் பொள்ளாச்சி இணைக்கப்பட்டு, பிரபலமான சந்திப்பாக இருந்தது.

ஆனால், சேலம் கோட்டம் உருவாக்கப்பட்ட போது, பாலக்காடு கோட்டத்தில் இருந்து முக்கிய பகுதிகள், சேலத்துடன் இணைக்கப்பட்டன. அதற்கு ஈடாக, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகள் பாலக்காடு கோட்டத்துக்கு தாரை வார்க்கப்பட்டன. அதன்பின், பொள்ளாச்சிக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

குறிப்பாக, மீட்டர்கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் துவங்கி, 2009ல் பொள்ளாச்சிக்கான அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. அடுத்த ஆறு ஆண்டுகளை, பொள்ளாச்சியின் முக்கியத்துவத்தை குறைக்க பெரியளவில் பாலக்காடு கோட்டம் பயன்படுத்திக் கொண்டது.

பொள்ளாச்சி - கோவை இடையிலான நல்லட்டிபாளையம், கோவில்பாளையம், செட்டிபாளையம் ஸ்டேஷன்கள் மூடப்பட்டன. ஆனால், பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் ஆனைமலை ரோடு, மீனாட்சிபுரம் முதலமடை, கொல்லங்கோடு, வடகன்னிகாபுரம், புதுநகரம், பாலக்காடு டவுன் என ஏழு ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன.

பொள்ளாச்சி வழித்தடத்தில் கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கவில்லை. தற்போது, சென்னை கோட்டம் சார்பில், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் கோட்டத்தால் திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், என, இரு ரயில்கள் மட்டுமே இயங்குகின்றன.

பொதுமக்களுக்கு மிக அதிக தேவையுள்ள பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், கடந்த, 17 மாதங்களாக ஒரு ரயில் கூட இயங்கவில்லை. தனியார் பஸ் உரிமையாளர்களுக்காக, இந்த வழித்தடத்தில் ரயில் இயக்காமல் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சி ரயில்வேயில் இருந்த அனைத்து வசதிகளையும் பறித்துக் கொண்டு, பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான ரயில் இயக்கம், வர்த்தக, பொருளாதார, சுற்றுலா மேம்பாடுகள் குறித்த அக்கறை இன்றியுள்ளது.

மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டும் பாலக்காடு கோட்டத்தில் இருந்து பொள்ளாச்சியை விடுவிக்க வேண்டும் என்ற கோஷம் பலமாக உள்ளது. இப்பகுதி எம்.எல்.ஏ., க்கள், எம்.பி.,கள், பொதுநல அமைப்புகள், ரயில்வே ஆர்வலர்கள், தொழில் வர்த்தக சபை சார்பில், மீனாட்சிபுரம் - பொள்ளாச்சி - கிணத்துக்கடவு பகுதிகளை, பாலக்காடு கோட்டத்தில் இருந்து மீட்டு, சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஈச்சனாரி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீட்டு, மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க முயற்சி மேற்கொள்வேன்.அதிக அளவில் ரயில்கள் இயக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும், என, உறுதி அளித்தார்.தற்போது, ஆட்சி அமைத்து முதல்வராக உள்ள ஸ்டாலின், பொள்ளாச்சி பகுதியின் எதிர்காலம், வளர்ச்சி கருதி, வர்த்தக மேம்பாடு, ரயில் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு, பாலக்காடு கோட்டத்தில் இருந்து மீட்டெடுக்க, மாநில அரசு சார்பில் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே, ரயில்வே ஆர்வலர்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

மதுரை கோட்டத்தில் இருந்த போது, ரயில்களை பராமரிக்க பொள்ளாச்சியில் ஆறு 'பிட் லைன்கள்' இருந்தன. ரயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் வசதி இருந்தது. ரயில்கள் நிறுத்தி வைக்க ஆறு 'ஸ்டேபிள்லைன்கள்' இருந்தன. 'கோச் மெய்ன்டனன்ஸ்' பிரிவும் செயல்பட்டது.மீட்புக்காக கிரேன் இயந்திரம், அவசர மருத்துவ உதவிக்கான சிறப்பு ரயில் ஆம்புலன்ஸ் பொள்ளாச்சியில் இருந்தது. இந்த வழித்தடத்தில், எக்ஸ்பிரஸ், அதிவேக பயணிகள் ரயில், பயணிகள் ரயில் என, 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கின. கோட்டம் மாற்றப்பட்டதால், ஆறு ஆண்டுகளுக்கு பின், இவை அனைத்தும் காணாமல் போய்விட்டன. 'கோச்' பராமரிப்பு வசதி, கேரள எல்லைக்குட்பட்ட கொல்லங்கோட்டுக்கு மாற்றப்பட்டது. இதனால், ரயில்வே ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments