சீமானின் தாயார் தமிழச்சியா? H.ராஜா கேள்விக்கு சீமான் பதில் பைத்தியகாரனுக்கு பரிதாப்படுவேனே தவிர பதில் தரமாட்டேன் !!

-MMH 

             தமது தாயார் தமிழர் இல்லை என விமர்சித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். பைத்தியகாரனுக்கு பரிதாப்படுவேனே தவிர பதில் தரமாட்டேன் என்று ஹெச். ராஜா குறித்த கேள்விக்கு சீமான் பதிலளித்துள்ளார்.

சீமானின் தாயார் தமிழச்சியா? 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சீமானின் தாயார் தமிழச்சியா? மலையாளிதானே என கூறியிருந்தார். ஹெச்.ராஜாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வேலூரில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

என் தாய் தமிழச்சியா என கேட்டுள்ளார் பாஜகவின் ஹெச்.ராஜா. நான் பைத்திக்காரனுக்கு பரிதாபப்படுவேன். ஆனால் பதில் சொல்லமாட்டேன். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது கனிமொழி, உதயநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர் நீட்டை ரத்து செய்வோம் என்றனர். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை  7 தமிழர்கள் விடுதலை பற்றி எதிர்கட்சியாக இருக்கும் போது திமுகவினர் பேசினார்கள். ஆனால் இப்போது ஆளுங்கட்சியான பின்னர் அதைப்பற்றி பேசவில்லை. 2016 ஆம் ஆண்டு டாஸ்மாக்கை மூடுவோம் என கூறிய திமுக தற்போது வாயே திறக்கவில்லை.

ஒரே நாடு- ஒரே தேர்தல்?

ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறிவிட்டு ஒரு மாநிலமான மேற்குவங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் தற்போது இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேர்தல் கொண்டு வருவது என்பது பைத்தியக்காரத் தனம். ஒரு மாநிலத்தில் ஆட்சி கலைந்தால் ஒட்டுமொத்தமாக எல்லா மாநிலத்துக்கும் எப்படி தேர்தலை நடத்த முடியும் என்பதுதான் எங்கள் கேள்வி. ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஒரே இந்தியா என்பதெல்லாம் நடக்காது.

என்ன செய்தது மத்திய அரசு?

தமிழக அரசு இதுவரை என்ன திட்டங்களை செய்துள்ளது என நாங்கள் ஒரு வெள்ளை அறிக்கை கொடுப்போம். மத்திய பாஜக அரசு ஏழரை ஆண்டுகளில் என்ன செய்தது என நீங்கள் வெள்ளை அறிக்கையை கொடுங்கள். தமிழக அரசு வேளாண் கடனை தள்ளுபடி செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் விவசாயிகள் பிரதமர் வீட்டை முற்றுகையிடுதல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் விவசாயிகளுக்கு நீங்கள் செய்யவில்லை.

மிரட்டும் திமுக

நாம் தமிழர்கள் நேரடியாக தேர்தலில் மோத கூடாது என திமுகவினர் மிரட்டுகின்றனர். பணம் தருவதாக பேரம் பேசுகிறார்கள். திராவிட அரசியல் கட்சிகள் வழக்கமாக செய்வது தான். ஆனாலும் நாம் தமிழர் கட்சியில் சிலர் அச்சப்படுகின்றனர். பிறகட்சிகளை திமுகவினர் அச்சுறுத்தக் கூடாது. தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுப்பது குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை. பதவிகளை ஏலம் விட்டால் கடுமையான தண்டனை என தேர்தல் ஆணையம் கூறியும் பதவிகளை ஏலம் விட்டுள்ளனர். அதன் மீது தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இவ்வாறு சீமான் கூறினார்.

-ஈஷா,ராஜேந்திரன்,ரமேஷ்.

Comments