பொள்ளாச்சி பகுதியில் பெய்து வரும் தொடர்மழை! கோவிலின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது!! நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு!!

    -MMH 

பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை யால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்லடம் ரோடு, மீன்கரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போன்று தேங்கி நின்றது. மேலும் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடையும் ஏற்பட்டது. 

மகாலிங்கபுரத்தில் கம்பம் சாய்ந்ததால் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிங்காநல்லூர், சோலபாளையம் பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பொள்ளாச்சி அமைதி நகரில் உள்ள மதுரை வீரன் கோவில் 40 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் யாரும் அங்கு இல்லை. இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.  

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையின் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 
இதன் காரணமாக  பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப் படவில்லை. இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்வதை தடுக்க வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதன்படி பரம்பிக்குளம் அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1410 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து 805 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 70.90 அடியாக உள்ளது. இதேபோன்று ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 267 கன அடி வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 348 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ளது. 
 
பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் பெய்த மழையளவு (மில்லிமீட்டர்)விவரம் வருமாறு:-
•சோலையார் 10 மி.மீ.
•பரம்பிக்குளம் 8
•ஆழியாறு 11
•திரு மூர்த்தி 16
•வால்பாறை 6
•மேல்நீராறு 19
•கீழ்நீராறு 15
•காடம் பாறை 17
•சர்க்கார்பதி 15
•வேட்டைக்காரன்புதூர் 9
•மணக்கடவு 24
•தூணக்கடவு, பெருவாரிபள்ளம் 17
•அப்பர் ஆழியாறு 18
•நவமலை 11
•பொள்ளாச்சி 56
•நல்லாறு 22
•நெகமம் 10
•சுல்தான் பேட்டை 29 மி.மீ.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-S.ராஜேந்திரன்.

Comments