அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் மாவட்ட கல்வி அதிகாரி! !

   -MMH 

   மாணவிகளுக்கான 'ஆன்லைன்' வகுப்புகளில், பெண் ஆசிரியர்கள் உடன் இருப்பதையும், திடீர் ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்வதையும், பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரி கீதா உத்தரவிட்டுள்ளார். கோவையில் கடந்த சில மாதங்களில், பேருந்து விபத்தில் பள்ளி மாணவர் பலி, நீர் நிலையில் மூழ்கி மாணவர்கள் இறப்பு, பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவி தற்கொலை என தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. பெற்றோர் மத்தியில் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 21 வகையான வழிகாட்டுதல்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளி பேருந்து ஓட்டுநர், நடத்துனர் விபரங்களை அறிந்து குற்றவியல் வழக்குகளும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். 

வாகனங்கள் சரியான முறையில் இயங்கும் நிலையில் உள்ளதை உறுதி செய்வதுடன், முதலுதவி பெட்டியை தேவைக்கேற்ப புதுப்பிக்க வேண்டும். பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி தொடர்ந்து இயங்குவதை கண்காணிக்க வேண்டும்.  

மாணவிகள் பயணம் செய்யும் பேருந்துகளில், பெண் நடத்துனர் நியமிக்கப்பட வேண்டும். தனியார் ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் தொலைபேசி, ஆதார், வாகன எண், வழி உள்ளிட்ட விபரங்களை பெற்று, பள்ளியில் பதிவேடு பராமரிக்க வேண்டும்.              

சிறப்பு வகுப்பு முடிந்து அனைத்து மாணவர்களையும், 5:30 மணிக்குள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பிவைப்பதை உறுதி செய்த பின்பே, முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் பள்ளியை விட்டு செல்லவேண்டும். 

உரிய கல்வித்தகுதிகளை கொண்ட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் அனைவருக்கும் பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு தொடர்பான பயிற்சி மற்றும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.      

ஆப்லைன் வகுப்புகளுக்கு கட்டாயம் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும் பொழுது, பெண் ஆசிரியர் உடன் இருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். பள்ளியின் முதல்வர், பொறுப்பு ஆசிரியர் திடீர் விசிட் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். 

சிறப்பு வகுப்புகளில் பங்கேற்க, மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. இவ்வகுப்புகள் காலை, 8:00 மணி முதல் மாலை, 5:30க்குள்மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாத வகையில் நடத்தப்பட வேண்டும். 

அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர், ஆசிரியர், சமூகஆர்வலர், உள்ளூர் மகளிர் காவல் நிலைய அதிகாரி மற்றும் பள்ளி மாணவியர் பிரதிநிதி அடங்கிய உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும்.           

பாலியல் சார்ந்த புகார்களை அமைக்க புகார் பெட்டி வைத்து, அதற்கான ஒரு சாவியை மூத்த பெண் ஆசிரியரிடமும், ஒரு சாவியை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், இலவச சட்ட ஆணையத்தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்.  

பள்ளிகளில் கல்வி அதிகாரி, காவல் நிலைய கண்காணிப்பாளர், சைல்டு லைன், புகார் சார்ந்த தொடர்பு எண்கள் அனைத்தும் தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும். 

பள்ளிகளில் பெறப்படும் பாலியல் புகார்களை உடனுக்குடன் கல்வித்துறை, குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தெரிவித்தல் அவசியம். 

பள்ளிக்கட்டணம் செலுத்தாத பிள்ளைகளை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நீக்குதல், மன/உடல் ரீதியான தண்டனைகள் வழங்குதல் கூடாது. இவ்வாறு, வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளோம். அரசு பள்ளிகள் போன்று, தனியார் பள்ளிகளிலும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். வழிகாட்டுதல்களை பின்பற்றப்படாவிட்டால், துறைரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments