பெண்களே உஷார்! நகை பாலிஷ் போடுவதாக யார் வந்தாலும் கவனம்!

-MMH

    பிறரை ஏமாற்ற வேண்டுமென்றால் அவர்களது ஆசையை தூண்ட வேண்டும் அல்லது தேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற வசனங்களை சினிமாவில் பார்த்திருப்போம். இந்த அடிப்படையில் தமிழகத்தில் நூதன முறையில் கொள்ளை சம்பவங்கள் நடப்பதை மறுக்க முடியாது. ஆனால், வட மாநிலங்களில் இப்படியெல்லாமா யோசிப்பார்கள் என்ற அளவிற்கு கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது.

குறிப்பாக கொள்ளையர்கள் இரண்டு வகைகளை கையாளுகின்றனர். ஒன்று, யோசிக்காமல் தாக்குதல் நடத்தி கொள்ளை அடிப்பது. மற்றொன்று, நடித்து நம்ப வைத்து பின்னர் கொள்ளையில் ஈடுபடுவது. வட மாநிலத்தவர் சமீப காலமாக தமிழகத்திலும் கை வரிசை காட்டி வருகின்றனர். ஸ்டவ் ரிப்பேர் செய்வதைப்போல வந்து வீட்டுக்குள் நுழைவது, வங்கி லோன் தருவதைப் போல வருவது, நோட்டமிட்டு காத்திருந்து பெண்கள் மட்டுமே இருக்கும் நேரத்தில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற நிறைய செய்திகளை சமீப நாட்களில் கண்டிருப்போம்.

அதன்படி சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வீடுகளில் உரிமையாளர் கண்முன்னே நகைகளைக் கொள்ளையடித்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொள்ளை நடந்த சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.

அந்தக் காணொளியில் நகைகளை பாலிஷ் செய்வதற்காக, இளைஞர் ஒருவர் உரிமையாளரிடம் நகைகளை எடுத்து வருமாறு கூற, அந்த வீட்டுப் பெண்ணும் இளைஞரை நம்பி நகைகளை எடுத்து வந்து கொடுக்கிறார். பின்னர், கூடுதல் நகைகளை எடுத்து வரச் சொல்லவே, அந்தப் பெண்ணும் வீட்டுக்குள் சென்ற நேரத்தில் வேறொருவருக்கு போன் செய்கிறார்.

அந்த நபர், இஸ்லாமியரைப் போல வந்து சாம்பிராணி புகையை வீட்டில் இருப்பவர்களுக்கு காட்டுகிறார். அந்த புகையை சுவாசித்த கணவன், மனைவி இருவரும் மயங்கி விழ, இளைஞர் அந்த நகைகளை திருடி செல்வது பதிவாகியுள்ளது. ஆகையால், நகைகளுக்கு பாலிஷ் போடுவது போல வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களிடத்தில், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

-பாரூக்.

Comments