ஆண்டிபட்டியில் செவிலியர் அடித்துக் கொலையா? காவல்துறை விசாரணை!

 

-MMH

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியில் வசித்துவருபவர் சுரேஷ்(44). இவர் திண்டுக்கல் நாகல் நகரில் சமையல் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி(43), ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்துவந்தார்.

ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் செல்வி மட்டும் தனியாக வசித்து வந்தார்.  இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகள் திண்டுக்கல்லில் சுரேஷுடன் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (24.11.2021) சுரேஷ் அவரது மனைவி செல்விக்கு செல்ஃபோனில் தொடர்புகொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆன நிலையில் இருந்ததால், அவருடைய உறவினர்களிடம் தெரிவித்து வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். வீடு பூட்டியிருந்த நிலையில், நீண்ட நேரத்திற்குப் பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வி வீட்டில் உள்ள பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து ஆண்டிபட்டி காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்துவருகின்றனர்.

கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் சென்று விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை செய்தனர். மேலும், காவல் துணை கண்காணிப்பாளர். தங்ககிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

-பாரூக், ராயல் ஹமீது.

Comments