வால்பாறையில் காட்டு யானையின் அட்டகாசத்தால் வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் அவதி! ரேஷன் கடையை உடைத்து அடாவடி!!

   -MMH 

  வால்பாறையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு பின்னர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. 

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 13 காட்டு யானைகள் ஆனைமுடி, நல்லமுடி, தாய்முடி எஸ்டேட் பகுதி அருகே உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு இருந்தன. அவற்றை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் தாய்முடி எஸ்டேட் (எம்.டி) பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்தன. பின்னர் அங்கிருந்த மகளிர் சுயஉதவிக் குழு ரேஷன் கடையை உடைத்து கோதுமை மூட்டைகளை வெளியே எடுத்து வீசி எறிந்து சூறையாடின. 

தொடர்ந்து கடைக்குள் இருந்த அரிசி மூட்டைகளை வெளியே எடுத்து அதை சாப்பிட்டுவிட்டு சேதப்படுத்தியன. இதை அறிந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அத்துடன் அவர்கள் தீ மூட்டியும், பட்டாசு வெடித்தும் விரட்டி னார்கள். ஆனால் அந்த யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. நீண்ட நேரம் கழித்து அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் மீண்டும் மதியம் 3 மணிக்கு தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தன. 

நீண்ட நேரமாக காட்டு யானைகள் அங்கேயே முகாமிட்டு நின்றதால் இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால், இரவில் தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்லும்போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்றனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-S.ராஜேந்திரன், திவ்யா குமார் (வால்பாறை).

Comments