கொரோனாவின் அடுத்த கெட் அப்! மக்களே எச்சரிக்கை!

   -MMH 

   தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதியவகை கொரோனா வைரஸால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.

கடந்த இரண்டாண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, தொடர்ந்து பலவகையில் உருமாற்றம் அடைந்து வருகிறது. உருமாற்றம் அடையும்போது வைரஸின் வீரியம் அதிகமாகும் என்பதால் பாதிப்பும் அதிகரிக்கும். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிற நிலையில், அடுத்த ஆபத்து வந்துள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்று பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து ஹாங்காங் வந்த இருவரிடமும், மலாவியிலிருந்து இஸ்ரேல் திரும்பிய ஒருவருவரிடமும் இந்தப் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டிருப்பதால், மீண்டும் ஒரு அவசரநிலை அமல்படுத்துவதற்கான நிலை உருவாகியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தென் ஆப்பிரிக்காவின் அண்டை நாடான போட்ஸ்வானாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு காணப்பட்டுகிறது.

புதிய வைரஸ் பாதிப்பால் தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலிருந்தும், அதைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்தும் வரும் விமானங்களுக்கு பிரிட்டன், சிங்கப்பூர், இஸ்ரேல், இத்தாலி ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.

புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், இதுகுறித்து விரிவான ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பின் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பத் தலைவர் மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு வல்லுநர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “புதிய வகை வைரஸின் தீவிரம் குறித்து இதுவரை தெரியவில்லை. அதிகமான உருமாற்றம் அடையும்போது, இந்த வைரஸின் தாக்கம், எவ்வாறு மனிதர்கள் உடலில் பாதிக்கிறது என்பது தெரியவரும். புதிய வகை வைரஸ் குறித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளோம். அப்போது உலக அளவிலான விஞ்ஞானிகள் பங்கேற்று ஆலோசிக்கும்போது மேலும் கூடுதல் விவரங்கள் கிடைக்கும். தற்போது இந்தப் புதிய வகை வைரஸைக் கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் போன்ற நாடுகளில் பி1.1.529 என்றா புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளை மிக தீவிரமாக கண்காணித்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்நாடுகளில் இருந்து வரும் பயணிகளோடு தொடர்பில் இருந்தவரையும் கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- பாரூக், ராயல் ஹமீது.

Comments