மிகவும் சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக இடிக்க வேண்டும்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்!

   -MMH 

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் முருகன், மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரேசன், கல்வி மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், ரமேஷ்குமார், கல்வி மாவட்ட செயலாளர்கள் சிங்கராயர், சகாயதைனேஸ், ஜெயக்குமார், மாவட்ட துணை தலைவர் ஸ்டீபன், மாவட்ட துணை செயலாளர் ஜீவா ஆனந்தி, கள்ளர்பள்ளி மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் தீணன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடக்க நடுநிலைப்பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்களினால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மாவட்ட நிருவாகம் உடனடியாக ஊராட்சி ஒன்றியப் பொறியாளர்களைக் கொண்டு பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, மிகவும் சேதமடைந்த கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும். தமிழக முதல்வரின் அறிவிப்பை முழுமையாக அமல்படுத்திடும் விதமாக ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் போராட்ட நாட்களை முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு தொடர்ந்து அறிவித்து வரும் அகவிலைப்படி உயர்வை கணக்கில் கொண்டு மாநில அரசு  உடனடியாக அகவிலைப்படி உயர்வை அறிவித்திட வேண்டும். கொரோனா தொற்று குறைந்து வருவதை கணக்கில் கொண்டு  அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருவதற்கு ஏதுவாக முழுமையாக பள்ளி செயல்பட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளர்பள்ளி மாவட்டம் சார்பாக டிசம்பர் 9 முதல் மதுரையில் நடைபெற உள்ள காத்திருப்பு போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திரளாக ஆசிரியர்கள் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments