தக்காளிக்கு சிக்கன் பிரியாணி இலவசம்! பிரியாணிக்கு தக்காளி இலவசம்! உணவகத்தின் வினோத அறிவிப்பு!

 

-MMH

    மதுராந்தகம் அருகேயுள்ள ஒரு ஆம்பூர் பிரியாணி கடை, 'இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும்' என்று அறிவித்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும், தக்காளி வரத்து வரக்கூடிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தக்காளியின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இது ஒருபுறம் இருக்க தக்காளியை வைத்து ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணி கடையில் நேற்று அதிரடி ஆஃபர் அறிவித்து விற்பனை செய்யப்பட்டது. முழு பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், அதுபோல ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் போன்ற சலுகையை அறிவித்து விற்பனை செய்தது.

அழிந்து வரும் விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய இந்தச் சலுகை, நேற்று ஒருநாள் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தக்காளியின் விலை, பெட்ரோல் - டீசல் போன்று நாளுக்கு நாள் உயர்கிறது. இதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தக்காளி விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் வீட்டு மாடியில் தோட்ட பயிர் செய்தால் இந்த விலை உயர்வை குறைக்க முடியும் என கடை உரிமையாளர் தெரிவித்தார்.

-ராயல் ஹமீது.

Comments