வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆசிரியரின் முறையற்ற செயலால் உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவி!!

    -MMH 

கோவை உக்கடத்தை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவியின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் உறவினர் வீட்டுக்கு சென்றனர். மாணவியின் தந்தை வெளியே சென்றார். இதனால் அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் மாலை 4 மணிக்கு தந்தை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. அவர் கதவை தட்டினார். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை.

எனவே அவர் தனது மகள் தூங்குவதாக நினைத்து, வெளியே சென்று விட்டு மாலை 6 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது அந்த மாணவி வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அந்த மாணவியை மீட்டு கோவை அரசு ஆஸ் பத்திரிக்கு  கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மாணவியின் தற்கொலைக்கு, அவர் முன்பு படித்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததுதான் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மகளிர் போலீசார் விசாரணையை தொடங்கினர். 

இதில், மாணவி கடந்த ஆண்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துள்ளார். அப்போது கொரோனா காரணமாக பள்ளி மூடப்பட்டதால், ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அப்போது, ஆன்லைன் வகுப்பில் மாணவியிடம் இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி (வயது 35) என்பவர் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதை மாணவி பயத்தின் காரணமாக வெளியே சொல்ல வில்லை. பின்னர் நேரடி வகுப்பு தொடங்கியதும், ஆசிரியரின் பாலியல் தொல்லை அதிகரித்தது.

மேலும் சிறப்பு வகுப்பு உள்ளதாக மாணவியை பள்ளிக்கு அழைத்து, மிதுன்சக்கரவர்த்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அதன் பின்னர் கொரோனா 2-வது அலை முடிந்து பிளஸ்-2 வகுப்புக்கு மாணவி செல்லும்போதும், இந்த பாலியல் தொல்லை தொடர்ந்து உள்ளது. இது பற்றி மாணவி, தனது ஆண் நண்பரிடம் கூறி அழுதுள்ளார். மேலும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் மாணவி, பெற்றோரிடம் தனக்கு பள்ளி பிடிக்க வில்லை என்று கூறி அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கினார். தொடர்ந்து அந்த மாணவி அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து பிளஸ்-2 படிப்பை தொடர்ந்தார். ஆனாலும், ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தியின் பாலியல் தொந்தரவு தொடர்ந்தது. இதனால் மனவேதனையடைந்த பள்ளி மாணவி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மிதுன் சக்கரவர்த்தி மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 

அதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த மிதுன்சக்கரவர்த்தியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஆசிரியரின் மனைவியும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மிதுன் சக்கரவர்த்தி வேலையைவிட்டு நின்று விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே மாணவியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் கோகிலவாணி மற்றும் போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா அந்த தனியார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments