சிங்கம்புணரி பாலாற்று படுகையில் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் ஆய்வு!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையில் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது காளாப்பூர் தடுப்பணை, அணைக்கரைப்பட்டி பாலம், மேலப்பட்டி அணைக்கட்டு உள்ளிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது அணைக்கட்டுகளின் தரம் மற்றும் நீர்வரத்து பற்றிய விளக்கங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் நிருபர்களிடம் பேசும்போது, மணிமுத்தாறு, விருசிலைஆறு, பாலாறு மற்றும் தேனாறு உள்ளிட்ட நான்கு ஆறுகள் சிவகங்கை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் இந்த மழை சிவகங்கை மாவட்ட மக்களுக்கு பாதிப்பில்லாத மழையாக உள்ளது. எந்த ஒரு பாதிப்பும் இல்லாத முழு திருப்தியாக இந்த மழை சிவகங்கை மாவட்டத்திற்கு கிடைத்திருக்கிறது, 100% பலன் கொடுத்துள்ளது. மேலும் இந்த மாவட்டத்தில் 543 கண்மாய்கள் உள்ளன. அதில் 75% கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில் மேலும் இந்த மாவட்டத்திற்கு மழை தேவை.  நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சிவகங்கை மாவட்டத்திற்கு கூடுதலாக தடுப்பணைகள் தேவையுள்ளதை

நீர் மேலாண்மைத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதன் விளைவாக மேலும் 6 தடுப்பணைகள் சிவகங்கை மாவட்டத்தில் புதிதாகக் கட்டித் தரப்படும் என சட்டமன்றத்தில் மாண்புமிகு நீர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார் என்று கூறினார்.

இந்த நிகழ்வின்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments