பொள்ளாச்சியில் பிரபல மருத்துவமனை மீது பரபரப்பு குற்றச்சாட்டு! பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை முற்றுகையிட்டதால் உச்சகட்ட பரபரப்பு!!

    -MMH 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜாவின் மனைவி சிவசங்கரி கருவுற்ற நாள் முதல்  பொள்ளாச்சியில் பிரபலமான தனியார் மருத்துவமனையில் தொடர் ஆலோசனை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பிரசவத்திற்காக தொடர் ஆலோசனை பெற்ற அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டிய தம்பதியர்களுக்கும் உறவினர்களுக்கும் அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது என்பது பின்புதான் தெரிய வந்தது. குழந்தையின் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய மருத்துவர்கள் உடனடியாக கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சென்ற குழந்தையின் உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் குழந்தையைக் காப்பாற்றுவது சிரமம் என கூறி குழந்தையை திருப்பி அனுப்பி உள்ளனர். தவமிருந்து பெற்ற குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கருவுற்ற நாள் முதல் பிரசவம் வரை தங்கள் மருத்துவமனையில்.தான் தொடர் சிகிச்சை எடுத்தோம் தாங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறியதை நம்பி ஏமாந்து விட்டோம் என்று கதறி அழுது டாக்டரையும் மருத்துவமனை நிர்வாகத்தையும் முற்றுகையிட்டு இறந்த குழந்தைக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மயக்க நிலையில் இருந்த சிவசங்கரிக்கு மேல் சிகிச்சை எதுவும் அளிக்காமல்  டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பிய செயல் கண்டிக்கத்தக்கது என்று கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறந்த குழந்தைக்கு நியாயமும் நீதியும் வேண்டும் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவமனையில் இதுபோன்ற தவறுகள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments