செங்கல் உற்பத்தியை தொடங்க முதல்வருக்கு கோரிக்கை ! எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள்! !

   -MMH 

   கோவையை அடுத்த சின்னதடாகம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் செங்கற்கள் கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கட்டுமான பணிகளுக்காக கொண்டு செல்லப்படுகிறது.

இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது நீதிமன்ற தடை உத்தரவால் கனிம வளத்துறை மூலம் தடாகம் பகுதியில் உள்ள அனைத்து செங்கல் சூளைகளும் மூடப்பட்டு உள்ளது.

இதனால் இந்த தொழிலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான  தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. இது குறித்து கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: "கோவையில் செங்கல் உற்பத்தி இல்லாததால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் செங்கற்களின் விலையும் உயர்ந்து உள்ளது. 3000 செங்கல் கொண்ட ஒரு லோடு முதலில் ரூ.25 ஆயிரத் திற்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு லோடு ரூ.40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதனால் கட்டுமான தொழில் சார்ந்த துறையினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். செங்கல் சூளைக்கு தேவைப்படும் விறகுகள் மதுரை, கரூர், சேலம், மாவட்டங்களில் இருந்து வாங்கப்பட்டது. சூளைகள் செயல்படாததால் விறகு தொழில் சார்ந்த குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தொழிலாளர்கள் மற்றும் செங்கல் சூளை தயாரிப்பாளர்கள் மாற்றுவேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

அவர்களால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடிய வில்லை. கடனுக்கு வாங்கி நூற்றுக்கணக்கான வாகனங்களை வங்கி மற்றும் தனியார் நிறுவனத்தினர் எடுத்து செல்லும் நிலை உள்ளது. எனவே சட்டத்திற்கு உட்பட்டு செங்கல் உற்பத்தி தொழிலை நடத்த தயாராக உள்ளோம். இதற்காக தமிழக அரசு, அதிகாரிகள் கொண்ட வழி காட்டு குழு ஒன்றை அமைக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி செங்கல் தொழிலை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் பல வளர்ச்சி பணிகளை முதல்-  அமைச்சர்  செய்து வருகிறார். எனவே எங்கள் கோரிக்கையின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-S.ராஜேந்திரன்

முகமது சாதிக் அலி.

Comments