பெருகி வரும் இளம் குற்றவாளிகள்! காரணம் என்ன?

-MMH

       நமது நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் ஒரு மதிப்புமிக்க சொத்தாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள், நாளைய நமது நாட்டின் தலைவர்களாக உருவாக வேண்டியவர்கள். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இளமைப் பருவம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நிலையாகும். ஆனால் நாட்டின் தேசிய குற்றப் பதிவேடு புள்ளிவிவரங்கள், குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்களின்  எண்ணிக்கை பெருகி வருவதாக தெரிவிக்கின்றன.

இது ஒரு அபாய அறிவிப்பாகும். இந்திய துணைக் கண்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு குற்றச் செயல்கள் பெருகி, இளம் குற்றவாளிகள் அதிகரித்து வருகிறார்கள். எந்தக் குழந்தையும் பிறக்கும்போது குற்றவாளியாக பிறப்பதில்லை. சமூகத்திலுள்ள குறிப்பிட்ட சூழல்களில், பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற காரணங்களால், அக மற்றும் புறச் சூழல்களின் காரணமாக குற்றவாளிகள் உருவாக்கப்படுகிறார்கள்.

தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளம் குற்றவாளிகள் 2005-ம் ஆண்டில் 18,939; இந்த எண்ணிக்கை உயர்ந்து 2015-ம் ஆண்டில் 31,396 ஆக உள்ளது. குற்றங்களின் எண்ணிக்கை 1.7 விழுக்காட்டிலிருந்து 2.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறார்களின் எண்ணிக்கை 18,22,602 இருந்து 29,49,499-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 38,256. இதில் ஆண் சிறார்களின் எண்ணிக்கை 37,984. குற்றங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கையில் 16 முதல் 18 வயதுடையவர்களின் எண்ணிக்கைதான் அதிகமானது. மொத்தம் 38,256 பேரில் 16-18 வயதுக்குள் இருப்பவர்கள். 28,867 பேர் வழிப்பறி, செயின் அறுப்பு, கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, பாலியல் சித்திரவதைகள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் இளங்குற்றவாளிகள் ஈடுபடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


இளங்குற்றவாளிகள் உருவாகும் பின்புலம் என்ன ?

வீரம் என்பது யாரையும் தாக்கி அடிக்கும் துணிச்சல் என்று கருதுகிறார்கள். வன்முறையை தூண்டும் திரைப்படங்கள், ஆபாச திரைப்படங்கள், வீடியோ கேம் கம்ப்யூட்டர் கேம் ஆகியவற்றில் பெரும்பகுதி நேரத்தை செலவிடும் இளைஞர்கள், அங்கிருந்துதான் முதலில் தங்களது வன்முறை சிந்தனையை பெறுகிறார்கள். கூடுதலாக நுகர்வு வெறி அதிகமாக அதிகமாக, அதனை நிறைவேற்றுவதற்கான பணம் வீட்டில் கிடைக்காத போது, அதனை சாதித்துக் கொள்ள வெளியே திருடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நீதி குறைந்த சமுதாயமானது பல குழந்தைகளை தெருவிற்கு வரும் நிலைக்கு  தள்ளிவிடுகிறது. சமத்துவமற்ற சமூக அமைப்பு சமூக வாழ்வில் ஒரு குற்றவியல் சார்ந்த தன்மையை உருவாக்குகிறது. இந்திய சமூக அமைப்பில் ஆகப்பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் வாழ்வதற்காகவே ஒரு கடினமானப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.

நிலவும் வேலைவாய்ப்பு இன்மை சமூக அமைப்பில் மிகப் பெரிய நெருக்கடியை தோற்றுவித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி சமமான கல்வி – உடை – ஆரோக்கியமான உணவு ஆகப்பெரும்பான்மையான இந்திய குழந்தைகளுக்கு எட்டாக் கனியாக இருக்கிறது. நகரமயமாதலும், வேலையிழப்பும் பல இளமையான குற்றவாளிகளை உருவாக்குகிறது.

குடும்பம் என்பது சமூக அமைப்பில் ஒரு முக்கிய அலகு. இளம் குற்றவாளிகள் உருவாவதற்கும் குடும்பம் என்பது மற்றொரு முக்கிய காரணமாகும். குடிகார கணவன், குழந்தைப் பராமரிப்பின்மை, தாய் தந்தையரின் கட்டுப்பாட்டு குறைவு, சிதைந்த குடும்பம், குடும்பத்தில் நிலவும் வறுமை, வசதியின்மை, வேலையின்மை முறையான கல்வி வாய்ப்பு இன்மை, தனிமை போன்ற காரணங்கள் இளங்குற்றவாளிகள் உருவாவதற்கு மற்றொரு அடிப்படையாக இருக்கிறது.

குடும்ப சிதைவின் காரணமாக வெளியே வரும் இளைஞனை குற்றத்தை தொழிலாக கொண்ட கிரிமினல் கும்பல் தத்து எடுத்துக் கொள்கிறது. உணவு – உடை – இருப்பிடம் பொழுதுபோக்கு என அனைத்தையும் வழங்கி சமூக விரோதியாக அவனை உருவாக்கிவிடுகிறது.

யார்? யாருக்காக? எதற்காக? ஏன்? என்று எதைப் பற்றியும் சிந்திக்காமல் வில்லிலிருந்து புறப்பட்டு தாக்கும் அம்பை போன்று கொலை கருவிகளாக செயல்படுகிறார்கள். சமநீதி இல்லாத சமூக அமைப்பு பல குழந்தைகளை நாதியற்ற அனாதைகளாக்கி தெருவிற்கு வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. உழைப்புக் கருவிகளில் இருந்தும் உழைப்பு சாதனங்களில் இருந்தும் ஆகப்பெரும்பான்மையான உழைப்பாளிகள் இன்று அன்னியமாக்கப்பட்டுவிட்டனர்.

சமூக சிந்தனையற்ற திரைப்படங்கள், வன்முறை வெறி இளைஞர்கள் மத்தியில் உருவாவதற்கு பிரதான காரணமாக அமைந்து விடுகிறது. பெண்களை போகப்பொருளாக காட்டும் ஆபாச திரைப்படங்கள் அவனது காம இச்சையை தூண்டி விடுகிறது. தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே நடத்துவதால் தமிழகம் தள்ளாட்டத்தில் உள்ளது.

மதுவின் போதை சமூகக் குற்றங்கள் செய்வதற்கு ஒரு துணிச்சலை தருகிறது. சின்னத்திரையிலும் வரம்பற்ற வன்முறை காட்சிகள், பெண்களை போகப் பொருளாகக் காட்டும் ஆபாச ஆடல் பாடல் குத்தாட்டம்; வசன அமைப்புகள், காட்சி ஊடகங்கள் சமூக குற்றவாளிகள் தழைத்தோங்கி வளர்வதற்கு உரமாகப் பயன்படுகின்றன. சிறு வயது முதலே சாதி வெறி, மத வெறி சூழலில் வளர்க்கப்படும் சிறுவர்கள் பெரும்பாலும் சிறார் குற்றவாளிகளாக பரிணமிக்கிறார்கள்.

சமீபத்தில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களில் மைனர் குற்றவாளிகளே அதிக அளவில் இடம் பெறுகின்றனர். திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக சமீபத்தில் நடந்த பல்வேறு கொலைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நபர்கள் பாதிக்கு பாதி மைனர் குற்றவாளிகள் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு வருங்கால சமுதாயத்தையே குற்றப் பின்னணி கொண்ட சமூகமாக மாற்றுவதற்கு என்ன காரணம், இதன் மூலம் யார் பயன் அடைகிறார்? மைனர் குற்றவாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான பின்னணி என்ன, அதை தடுத்து நிறுத்துவதற்கு என்ன வழி என்பதை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

மேலும் மைனர் குற்றவாளிகளை கூலிப்படைகளாகவும், ரவுடிகளாகவும் மாற்றுவது யார் அதை கொண்டு பயனடைவது யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது மிக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

-பாரூக், சிவகங்கை.

Comments