பாலத்தின் இருபுறமும் மிகவும் குறுகலாகவுள்ள சர்வீஸ் ரோடு! - குடியிருப்புவாசிகள் அச்சம்!!

   -MMH 

   கோவை, திருச்சி ரோட்டில் கட்டப்படும் பாலத்தின் இருபுறமும் மிகவும் குறுகலாகவுள்ள சர்வீஸ் ரோடு, எதிர்காலத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்துமென்ற அச்சத்தை, குடியிருப்புவாசிகளிடம் ஏற்படுத்தியுள்ளது.

கோவை, திருச்சி ரோட்டில் 3.5 கி.மீ., துாரத்துக்கு, 253 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலம், ரெயின்போ அருகிலுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே துவங்கி, ராமநாதபுரம் சந்திப்பைத் தாண்டி முடிவடைகிறது.வரும் பிப்ரவரிக்குள் பாலம் கட்டும் பணி முடிந்துவிடுமென்று, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.பாலத்தின் மூலம் சுங்கம் சிக்னல், ராமநாதபுரம் சிக்னல் ஆகிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்; தாமதம் தவிர்க்கப்படும் என்பதால் திருச்சி ரோடு வழியாக, நகரைக் கடந்து செல்வோருக்கு இந்த பாலம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.சர்வீஸ் ரோடு ரொம்ப சின்னது!நான்கு வழிப்பாலம் என்பதால், பாலத்தின் மேலே செல்லும் வாகனங்கள் வேகமாகப் போக முடியும்.

அதே நேரத்தில், பாலத்தின் இரு புறமும் சர்வீஸ் ரோடு மிகவும் குறுகலாகத்தான் இருக்கும் என்பது, இப்போதே தெளிவாகி விட்டது. பாலங்களுக்குக் கீழே அமைக்கப்படும் சர்வீஸ் ரோடு, தலா 7.5 மீட்டர் அகலத்தில் இருக்க வேண்டும். அதில்தான் மழை நீர் வடிகால், கேபிள் பாதை அமைக்கப்படும்.மாநில நெடுஞ்சாலைத்துறையில் அமைந்துள்ளபாலங்களின் கீழேயுள்ள சர்வீஸ் ரோடுகளே, இந்த அளவில் அமைக்கப்படும் நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் இந்த பாலத்தின் இரு புறமும், சர்வீஸ் ரோடு மிக மிக குறுகலாகவுள்ளது.அதிலும் எல்.ஜி.,நிறுவனம், கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகில் நான்கு மீட்டர் அளவில்தான் ரோடு அமைந்துள்ளது.கடும் நெரிசல் உறுதிஅந்தப் பகுதியின் வழியே கார்கள் செல்வதே கஷ்டமாகவுள்ளது. பாலம் அமைந்தாலும் உள்ளூர் டவுன்பஸ்களும், குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்களும், இந்த சர்வீஸ் ரோட்டில்தான் செல்ல வேண்டியிருக்கும்.அப்போது, மீண்டும் இந்த சர்வீஸ் ரோட்டில், போக்குவரத்து நெரிசல் நிச்சயமாக ஏற்படுமென்ற அச்சம், இருபுறமும் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு இப்போதே ஏற்பட்டுள்ளது.மொத்தம் 253 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் இந்தப் பாலத்தில், ஒரு அடி நிலம் கூட கையகப்படுத்தும்வேலை இல்லை. அதனால்தான் பாலம் கட்டும் பணியும் வேகமாக நடந்துள்ளது.சர்வீஸ் ரோட்டை ஏழரை மீட்டர் அமைக்க வேண்டுமென்று, நிலம் கையகப்படுத்துவதற்கு முயற்சி எடுத்திருந்தால், இந்த பாலம் வந்திருக்கவே வாய்ப்பில்லை என்கிறார்கள் விபரமறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.இதே போன்று, எதிர் புறத்திலும் சில இடங்களில் சர்வீஸ் ரோடு மிகவும் குறுகலாகத்தான் உள்ளது. அந்தப் பகுதியிலும் சிறிதளவு நிலம் எடுத்தால் மட்டுமே, இந்திய சாலைக்குழும விதிகளின்படி, 7.5 மீட்டர் அகலத்தில் சர்வீஸ் ரோட்டை அமைக்க முடியும்.பாலத்தைக் கட்டி முடிப்பதற்கு முன்பே, இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டியது, கோவையிலுள்ள மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதி காரி ஒருவர் கூறுகையில், 'தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில், நில ஆர்ஜிதம் செய்வதற்கு வாய்ப்பில்லை என்பதால்தான், பாலம் கட்டும் பணியை விரைவாக மேற்கொள்ள முடிந்தது. 'இப்போதுள்ள சர்வீஸ் ரோடு ஐந்தரை மீட்டர் அளவுக்கு இருக்கிறது. தேவைப்படும்பட்சத்தில், எதிர்காலத்தில் நிலம் கையகப்படுத்தி, சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்தலாம்' என்றார்.புதிய பாலங்கள், போக்குவரத்து பிரச்னைகளை தீர்ப்பதாக இருக்க வேண்டும்; புதிதாக ஒரு சிக்கலை உருவாக்கிவிடக்கூடாது!

-சுரேந்தர்.

Comments