சிங்கம்புணரியில் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஊரணியின் உபரிநீர்!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலைக்கான சாலை விரிவாக்கப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

விரிவாக்கப் பணிகளை கண்காணிக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என்று அலட்சியமாக நடந்து வருவதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகள் மற்றும் தடுப்புகள் வைக்கப்படாத காரணங்களால் பல்வேறு விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், சாலை ஓரமாக அமைந்துள்ள அரனத்தங்குண்டு ஊரணியில் நீர் நிரம்பினால் உபரி நீர் வெளியேறுவதற்கு அந்தப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்காமல் சாலை அமைத்து முடிக்கப்பட்டுவிட்டது.

தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நேற்று அரனத்தங்குண்டு ஊரணி முழுவதுமாக நிரம்பியது. ஆனால், வெளியேறுவதற்கு வழியில்லாததால் உபரி நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அந்தப் பகுதியில் சுமார் 100 வீடுகளுக்கு மேல் உள்ள நிலையில் அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

உடனடியாக சிங்கம்புணரி பேரூராட்சிக்கும், தீயணைப்புதுறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய சிறப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி ஊழியர்கள், மோட்டார் பம்பு கொண்டு பல மணி நேரம் போராடி குடியிருப்புகளுக்குள் புகுந்த நீரை வெளியேற்றினர்.

மீண்டும் சிங்கம்புணரியில் கனமழை பெய்யும் பட்சத்தில் அரனத்தங்குண்டு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மீண்டும் தண்ணீர் புகும் நிலை உள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் உபரி நீர் புகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டனர்.

- அப்துல்சலாம்.

Comments