பொள்ளாச்சி மாணவர்களை இனிப்பு வழங்கி வரவேற்ற உதயநிதி-அன்பில் மகேஷ்..!!

  -MMH

  கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் நேற்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது.

நீண்ட மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் நேற்று காலை முதல் மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பெத்தநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்று பள்ளி மாணவர்களை  வரவேற்றுக்கொண்டு இருந்தார்.

அங்குள்ள மாணவர்களுடன் அமைச்சர் உரையாடிக்கொண்டு இருக்கும் போதே, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் திடீரென பள்ளிக்கு விரைந்து வந்துள்ளார்.

அங்கு மாணவர்களுக்கு பேனா, பென்சில் மற்றும் இனிப்புகள் கொடுத்து மாணவர்களை வரவேற்றனர். இதையடுத்து அங்கு உள்ள பள்ளியில் மாணவர்கள் உட்கார்ந்திருக்க, உதயநிதி ஸ்டாலின் மாணவர்கள் முன்னிலையில் நின்று கொண்டு இருந்தார்.

அதன்போது, அமைச்சர் மாணவர்களிடம், "இங்கு நிற்பவர் யார் தெரியுமா?" என்று கேள்வி எழுப்ப, மாணவர்கள் அனைவரும் இவரை திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

ஒருகணம் வகுப்பறையில் சிரிப்பலை எழுந்துகொள்ள, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர் ஒரு எம்.எல்.ஏ என்று கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments