வடவள்ளி அருகே நடந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது! காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை!!

    -MMH 

கோவை அருகே உள்ள வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55), நகை வியாபாரி. இவர் கடந்த 30-ந் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு சென்று 2 கிலோ தங்க கட்டி மற்றும் நகை, ரூ.7 லட்சம் ரொக்கத்துடன் பஸ்சில் கோவை திரும்பினார். பின்னர் அவர் கோவை காந்திபுரத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அவர் தொண்டாமுத்தூர் சாலையில் வந்தபோது திடீரென்று மர்ம ஆசாமிகள் சண்முகத்தை வழிமறித்து தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 

இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் பவானி சிங், அப்துல் ஹக்கீம், அஷ்ரப் அலி, உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 12 பேர் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான சிக்கந்தர் பாஷாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, முக்கிய குற்றவாளி யான சிக்கந்தர் பாஷா, சம்சுதீன், அன்பரசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ நகை, தங்க கட்டி மற்றும் ரூ.5½ லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து நகை, பணத்தை மீட்ட தனிப்படை போலீசாருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் பரிசு வழங்கி பாராட்டினார். அத்துடன் மீட்கப்பட்ட நகையையும் அவர் பார்வையிட்டார். அப்போது கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் உடன் இருந்தனர். 

இது குறித்து ஐ.ஜி. சுதாகர் கூறியதாவது:-  

நகை வியாபாரியான சண்முகம், ஹால்மார்க் முத்திரைக்காக நகையை கொடுக்கும் கடையில் ஏற்கனவே கைதான பவானிசிங் என்பவர் வேலை செய்து உள்ளார். அவர் சிக்கந்தர் பாஷாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறோம். அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம். அதுபோன்று அதிகளவில் பணம் மற்றும் நகையை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments