தோல் தானம் பற்றிய விழிப்புணர்வு! அதன் பயன்பாட்டை பற்றிய கண்காட்சி துவக்கம்!!

   -MMH 

    கோவை : தேசிய உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு கங்கா மருத்துவமனையில் தோல் தானம் பற்றிய விழிப்புணர்வு அதன் பயன்பாட்டை பற்றிய கண்காட்சி துவங்கப்பட்டது. 

கண்பார்வையற்றோருக்கு  கண்தானம் மூலம் மறுவாழ்வு கிடைப்பது போல தீக்காயம், விபத்து போன்றவற்றில் சிக்கி தோல் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் வருபவர்களுக்கு தோல் தானம் மறுவாழ்வு அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவும் ,தேசிய உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டும் கங்கா மருத்துவமனையில் தோல் தானம் பற்றிய விழிப்புணர்வு அதன் பயன்பாட்டை பற்றிய கண்காட்சியும் துவங்கப்பட்டது. கோவை கங்கா மருத்துவமனையில் கை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் இரு ஆண்டுகளாக பிரத்யேக தோல் வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் இதுவரை இறப்பிற்குப்பின் 103 பேர்கள் தோல் தானம் செய்துள்ளனர் அதன்மூலம் இருநூறு  பேர் பலனடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவர் ராஜ சபாபதி கங்கா மருத்துவமனையில் தோல் வங்கியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அளித்த தோல் தானத்தால் கோவை மட்டுமில்லாமல் டெல்லி ஜாம்ஷெட்பூர், மணிப்பால் போன்ற நகரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கும் தோல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தானம் பெற்ற தோலை ஐந்து வருடங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால் பல நோயாளிகளுக்கு தோலை பயன்படுத்த முடியும் என்றும், கண் தானத்தை போல  தோல் தானத்திற்கும் அதிக அளவு விழிப்புணர்வு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் ராஜா சண்முக கிருஷ்ணன், ராஜசேகரன், சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments