முந்திரி லாரியை கடத்திய முன்னாள் மந்திரி மகன் கைது!

   -MMH 

   ராசிபுரம் அருகே ஒரு கோடி மதிப்பிலான முந்திரியை ஏற்றி வந்த லாரியை கடத்திய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூரில் தனியாருக்குச் சொந்தமான முந்திரி ஆலையிலிருந்து தூத்துக்குடியைச் சேர்ந்த கன்டெய்னர் லாரியில் ரூ.1.10 கோடி மதிப்புள்ள 16 டன் முந்திரி லோடு ஏற்றப்பட்டு, தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்தது. கன்டெய்னர் லாரியை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த டிரைவர் ஹரி ஓட்டினார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே பொட்டலூரணி விலக்கு பகுதியில் லாரி வந்த போது, அந்த பகுதிக்கு காரில் வந்த 7 பேர் கும்பல் திடீரென கன்டெய்னரை மறித்தனர். பின்பு அந்தக் கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி ஓட்டுநரை கீழே இறக்கிவிட்டு லாரியை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவி செயல்படாததாலும், டிரைவரின் செல்போன் சுவிட்ச்ஆப் ஆனதாலும் சந்தேகமடைந்த லாரி புக்கிங் அலுவலக கணக்கர் முத்துகுமார்(43) புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலறிந்த எஸ்பி ஜெயக்குமார், தூத்துக்குடி ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தியவர்களை கைது செய்து கன்டெய்னர் லாரியை மீட்க உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் டோல்கேட் பதிவுகளின் மூலம் தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், கடத்தல்காரர்கள் கன்டெய்னரில் இருந்த ஜிபிஎஸ் கருவியை அகற்றியதால் லாரி இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், தூத்துக்குடியிலிருந்து லாரி, நாமக்கல் நோக்கி செல்வதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கன்டெய்னரை துரத்திச் சென்றனர். காவல்துறையினர் விரட்டி வருவதை அறிந்த கடத்தல் கும்பல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, காக்கநேரி என்ற இடத்தில் கன்டெய்னரை நிறுத்திவிட்டு காரில் தப்பியோடியது. தனிப்படையினர் கன்டெய்னரை  மீட்டனர். அப்போது, நாமக்கல் மாவட்ட எல்லையான திம்மநாயக்கன்பட்டி பகுதியில், சந்தேகத்திற்கிடமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரை, தனிப்படையினர் மடக்கினர்.

அதில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். தீவிர விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மந்திரி செல்லப்பாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங்(39),  விஷ்ணுபெருமாள்(26), பாண்டி(21), கணபதி மாரிமுத்து(30), மனோகரன்(36), செந்தில்முருகன்(35), ராஜ்குமார்(26) என்பதும், இவர்கள்தான் லாரி ஓட்டுநரை தாக்கி அவரை காரில் ஏற்றியும்,  விஷ்ணுபெருமாள், பாண்டி ஆகியோர் கன்டெய்னரை ஓட்டிச் சென்றதும் தெரிய வந்தது. மீட்கப்பட்ட கன்டெய்னர், பறிமுதல் செய்யப்பட்ட கார் ஆகியவை புதுக்கோட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 7 பேரும் கைது செய்யப்பட்டனர். ரூ.1.10 கோடி முந்திரியுடன் கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரியை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் மீட்டு 7 பேரை கைது செய்த தூத்துக்குடி ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினரை, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார்.

ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்தவர், சி.த.செல்லப்பாண்டியன். இவரின் இரண்டாவது மகன்தான் ஜெபசிங், தற்போது கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

- பாரூக், ராயல் ஹமீது.

Comments