சினிமாவை மிஞ்சிய பொள்ளாச்சி போலீஸ்... வழிப்பறி திருடர்களை விரட்டிப் பிடித்தனர்!!

    -MMH 
   உடுமலை தளி அருகே உள்ள மாமரத்து பட்டி தென்குமாரபாளைத்தை சேர்ந்த தங்கராஜ்  என்பவரிடம் நேற்று வாலிபர்கள் சிலர் அவரை மிரட்டி அடாவடி செய்து அவர் வைத்திருந்த நான்கு சக்கர வாகனம் மாருதி கார் மற்றும் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை கண்ணெதிரே  பறித்துக்கொண்டு காரில் தப்பினர். 

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற தங்கராஜ் பின்பு தளி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக  தளி காவல் துறையினர்  கண்ட்ரோல் ரூமுக்கு தொடர்பு கொண்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட  வாலிபர்கள் காரில்  தப்பிச் செல்வதாக தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின் படி ஹைவே பேட்ரோல் போலீசாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பொள்ளாச்சி பழனி சாலையில்  திப்பம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது திருடப்பட்ட காரில் வந்த வாலிபர்கள் காரை நிறுத்தாமல்  வேகமாக சென்றனர். இதனை அடுத்து போலீசார் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு உடனடியாக தங்கள் காரை எடுத்துக் கொண்டு காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் வாகன விபத்துக்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் நிதானமாகவும் விவேகத்துடன் செயல்பட்டு RTO அலுவலகம் அருகே சின்ன பாளையம்  பகுதியில் காரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

காவல்துறையின் விசாரணையில் தங்கராஜ் என்பவரிடம் கார் மற்றும் 3 பவுன் செயின் வழிப்பறி செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. வழிப்பறியில் ஈடுபட்ட  ராபின், அருள்ராஜ், சேவாக், மாரியப்பன் ஆகியோரிடமிருந்து  கார் மற்றும் நகை பறிமுதல் செய்த போலீசார் தளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 4 பேரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி பழனி சாலையில்  போலீசார் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு  வாகனத்தில் வேகமாகச் சென்று வழிப்பறி திருடர்களை மடக்கி பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில்  பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Comments