சமூக வலைத்தளத்தில் அரிவாளுடன் சவால்விட்ட தொழிலாளி ஓட ஓட வெட்டிக் கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை!!

 -MMH

கோவையை அடுத்த காந்திமாநகரை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவருக்கு கவுசல்யா (24) என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். அசோக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி கும்பலை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அசோக்குமார், தனது இன்ஸ்ட்ராகிராம் என்ற சமூக வலைத்தள பக்கத்தில் அரிவாளுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவு செய்து, அதற்கு கீழ் "எங்கள் ஏரியாவை யாரும் டச் பண்ண முடியாது. யாராவது வர முடியுமா?" என்று சவால் விடும் வகையில், ஒரு வாசகத்தை பதிவிட்டு இருந்தார். 

இதை அசோக்குமாரின் எதிர்கோஷ்டியை சேர்ந்த விக்கு என்ற சண்முகம் பார்த்துள்ளார். இதனால் அவர் தனது கூட்டாளிகள் சிவா, பாபு, அமர்நாத், மணி ஆகியோருடன் மோட்டார் சைக்கிள்களில் காந்திமாநகர் பகுதிக்கு சென்றார். 

அங்கு இரவு 9 மணியளவில் அசோக்குமார் வீட்டின் வெளியே தனது நண்பர் சிவபாலன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.  அப்போது அங்கு கூட்டாளிகளுடன் வந்த சண்முகம், அசோக்குமாரிடம், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு குறித்து கேட்டார். இதனால் அவர்கள் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

இதில் ஆத்திரம் அடைந்த சண்முகம் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து அசோக்குமாரை அரிவாளால் வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடத்தொடங்கினார். ஆனால் அவர்கள் 5 பேரும் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி சென்று அசோக்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதில் உடலில் பல இடங்களில் ரத்த காயம் அடைந்த அசோக்குமார் ரோட்டில் துடிதுடித்தபடி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

அசோக்குமாரின் உடலை பார்த்து, அவருடைய மனைவி கவுசல்யா கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் அசோக்குமாரை வெட்டி கொலை செய்த விக்கு என்ற சண்முகம், அவரது கூட்டாளிகளான சிவா, பாபு, அமர்நாத், மணி ஆகிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 தலைமறைவான சண்முகம் உள்பட 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள்  உள்ளன.  இந்த நிலையில் ரவுடி கும்பலை சேர்ந்த4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் அரிவாளுடன் சவால் விட்டு புகைப்படம் வெளியிட்ட தொழிலாளியை ஓட ஓட விரட்டி ரவுடி கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், முகமது சாதிக் அலி.

Comments