சிங்கம்புணரியை மிரட்டும் மருத்துவக் கழிவுகள்! நோய்த்தொற்று பரவும் அபாயம்! விழித்துக் கொள்வார்களா அதிகாரிகள்?

 -MMH

எந்த ஒரு மருத்துவமனையும், அங்கிருக்கும் மருத்துவக் கழிவுகளை வெளியே கொட்டுவது சட்டப்படி குற்றமாகும். முறையாக மருத்துவ கழிவுகளைத் தனித் தனியாகப் பிரித்து, உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை மையத்திடம் ஒப்படைக்க வேண்டியது அந்தந்த மருத்துவமனையின்‌ கடமையாகும். இந்திய‌ மருத்துவ நிறுவன சட்டம் (Clinical Establishment act) விதிப்படி, இந்த வழி முறைகளை முறையாகப் பின்பற்றினால் மட்டுமே மருத்துவமனை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படும்.

மருத்துவக் கழிவுகள் மருத்துவமனைகளால் தரம் பிரிக்கப்பட்டு எரியூட்டப்பட வேண்டும் அல்லது அருகிலிருக்கும் எரியூட்டும் மையத்துக்கு அனுப்பப்பட வேண்டும். உருவாகும் மருத்துவக் கழிவுகள் குறித்தும், அவை எங்கே எரியூட்டப்படுகின்றன என்பது குறித்தும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையத்தளத்தின் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு அதைப் பதிவிட வேண்டும்.

பல மருத்துவமனைகள் எரியூட்டுச் செலவை மிச்சப்படுத்த முயற்சிக்கின்றன. உருவாகும் கழிவுகளில் ஒரு பகுதியை மட்டுமே எரியூட்டு மையத்துக்கு அனுப்பி, ஏனைய மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாக அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத இடங்களில் கொட்டுகின்றன.

அதேபோல சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி நகர் பகுதியில் சுந்தரம் நகரில் இருந்து சிறுவர் பூங்கா செல்லும் சாலையில் நேற்று, ஒரு ஆழ்துளை கிணற்றின் மேல் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் பொதுமக்களை அச்சமடையச்செய்துள்ளது. 

ஏற்கனவே சிங்கம்புணரியில் பெரியாறு கால்வாய், அரசினம்பட்டி சாலை, சிங்கம்புணரி இடுகாடு அருகே பாலாற்றுப் பாலத்தின் அருகிலும், ஏரியூர் சாலையிலும் தொடர்ச்சியாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்த நிலையில், அவற்றை பொதுவெளியில் கொட்டும் நபர்கள் யார் எனக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளாததால், நேற்று சிங்கம்புணரி நகரின் குடியிருப்புப் பகுதியில் அலட்சியமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா, டெங்கு என பொதுமக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் நகரின் உள் பகுதியிலே, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினசரி கடந்து செல்லும் பாதையில்

எந்தவித அச்சமும் இல்லாமல் மருத்துவக்கழிவுகள் தற்போதும் கொட்டப்பட்டுள்ளது. சில தனியார் மருத்துவமனைகளின் சட்டவிரோதமான இந்தச் செயலுக்கு, இதைப்போன்ற முந்தைய சம்பவங்களின் மீது எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். 

சிங்கம்புணரியைச் சுற்றி ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு தற்போது நகரின் உள்பகுதியிலேயே கொட்டப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மருத்துவக் கழிவுகளின் மேலாண்மை சீர்படுத்தப்படாமல் எவ்வளவு தடுப்பூசி போட்டும் பயனில்லை!

- சிவகங்கை மாவட்ட நிருபர்கள் குழு.

Comments