மின்வேலியில் சிக்கி உயிரிழந்த குட்டியானை! காண்போரை கண்கலங்க செய்யும் தாய் யானையின் பாசப் போராட்டம்! !

   -MMH 

  கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் மின்வேலியில் சிக்கி 3 வயது குட்டி ஆண் யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

கேரள - தமிழக எல்லையை ஒட்டியுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் ஏராளமான யானைகள் உள்ளன. இவை உணவு மற்றும் குடிநீா் தேடி அருகிலுள்ள கிராமப் பகுதிக்குள் நுழைவது வழக்கம். இச்சமயங்களில் அவ்வப்போது யானைகள் ரயிலில் அடிபட்டும், பள்ளங்களில் விழுந்தும், மின் வேலியில் சிக்கியும் உயிரிழப்பது தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா அணை அருகில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தைக் கடக்க முயன்ற 3 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். அப்பகுதிக்கு வந்த வனத் துறையினா் யானையின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கிருந்த தாய் யானை, தன் தும்பிக்கையால் உயிரிழந்த குட்டி யானையைத் தொட்டு தடவி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

இதனையடுத்து வனத் துறையினா் தாய் யானையை அங்கிருந்து விரட்டினா். பின்னா், வன மருத்துவா்கள் குட்டி யானையை உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனா். உயிரிழந்த குட்டி யானையை, தாய் யானை எழுப்ப முயலும் காட்சி பாா்ப்போரின் கண்களைக் கலங்க செய்தது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-S.ராஜேந்திரன்.

Comments