கடலூரில் இருளர் பழங்குடியினப் பெண்ணுக்கு, தோட்டத்தில் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

    -MMH 

      பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நேரமில்லாததால் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்த நெகிழ்ச்சியான சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அகரம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி இனத்தவரான சக்திவேல் என்பவரது மனைவி முத்துலட்சுமி. சக்திவேல், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிகழ்வு நடந்த அன்று ஆதார்‌ அட்டை திருத்தம் செய்வதற்காக திட்டக்குடி சென்றிருந்திருக்கிறார்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமிக்கு கடந்த வியாழனன்று பகல் 12 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

அப்பொழுது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிட்டதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸை உதவிக்கு அழைத்தனர். முத்துலட்சுமியின் வீட்டின் அருகே போதிய சாலை வசதி இல்லாத காரணத்தினால் ஒரு இடத்தைத் தாண்டி மேற்கொண்டு ஆம்புலன்ஸை உள்ளே கொண்டுசெல்ல முடியாமல் போனது.

இதையடுத்து, மருத்துவ உதவியாளர் சௌந்தரராஜன் மற்றும் ஓட்டுநர் சிவக்குமார் இருவரும் ஸ்ட்ரெச்சர் மூலமாக முத்துலட்சுமியை அழைத்துவர முடிவு செய்தனர்.

ஆனால், பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த முத்துலட்சுமிக்கு அவரது வீட்டருகில் உள்ள வீட்டின் அருகே இருந்த தோட்டத்தில் உட்கார்ந்து விட்டார். அப்போதே குழந்தை வெளியே வரத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் சௌந்தரராஜன் ஓட்டுநர் சிவக்குமார் உதவியுடன் முத்துலட்சுமியை பாதுகாப்பாக வைத்து, சேலை மூலமாக திரை அமைத்து அவருக்கு பிரசவம் பார்க்கத் தொடங்கினார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

மருத்துவ உதவியாளர் சௌந்தரராஜன், தாய் மற்றும் குழந்தைக்குச் செய்ய வேண்டிய மருத்துவ உதவிகள் அனைத்தையும் செய்தார். பின்னர் தாய் முத்துலட்சுமி மற்றும் குழந்தை இருவரையும் மருத்துவனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார். தற்போது தாய் மற்றும் குழந்தை இருவருமே பாதுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர்.

மிகத் துரிதமாக செயல்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைவாகச் சென்ற ஓட்டுநர் சிவக்குமார் மற்றும் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சௌந்தரராஜனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

- பாரூக்.

Comments